டிவியில் ஒளிபரப்பான பிறகும் 100ஐத் தொட்ட 96

தினமலர்  தினமலர்
டிவியில் ஒளிபரப்பான பிறகும் 100ஐத் தொட்ட 96

2018ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படங்களில் பலரின் மனதையும் கவர்ந்த ஒரே படமாக '96' இருந்தது. அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் அக்டோபர் 4, 2018 அன்று வெளியானது.

படம் வெளியாகி ஒரு மாதமே கடந்த நிலையில் நவம்பர் 6ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்தப் படம் டிவியில் ஒளிபரப்பானது. படத்தில் நடித்த த்ரிஷா கூட “5வது வாரத்தில் இருக்கிறோம். இப்போது 80 சதவீதம் மக்கள் தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். இவ்வளவு சீக்கிரத்தில் 96 படத்தை டிவியில் ஒளிபரப்புது நியாயமில்லை. படத்தை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள்,” என்று கூட கேட்டுக் கொண்டார். படத்தின் இயக்குனரும் அதே கோரிக்கையை வைத்திருந்தார். ஆனாலும், அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் தீபாவளியன்று படத்தை ஒளிபரப்பினார்கள்.

படம் டிவியில் ஒளிபரப்பான பின்னும் தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது சில நாட்களோடு நின்றுவிடவில்லை. டிவியில் ஒளிபரப்பாகி இன்றுடன் 66 நாட்களாகிறது. '96' படம் அதன் பட வெளியியீடிலிருந்து இன்று 100 வது நாளைத் தொடுகிறது.

ஒரு படம் டிவியில் ஒளிபரப்பான பின் 66 நாட்களைக் கடந்து 100வது நாளைத் தொடுவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்தப் பெருமை '96' படத்திற்குக் கிடைத்திருக்கிறது.

மூலக்கதை