தமிழ்நாடு முதல் நாள் வசூல், 'விஸ்வாசம்' டாப் ?

தினமலர்  தினமலர்
தமிழ்நாடு முதல் நாள் வசூல், விஸ்வாசம் டாப் ?

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் வெளியாகின. இருவருக்குமே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், இரண்டு படங்களையும் அவரவர் அபிமான நடிகரின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் நேற்று முன்பதிவு செய்து பார்த்தார்கள்.

அதிகாலைக் காட்சிகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் பல தியேட்டர்களில் அதிகாலை 1 மணிக்கே 'விஸ்வாசம்' காட்சி திரையிடப்பட்டது. ஆனால், 'பேட்ட' படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்குதான் நடந்தது. அதன் பிறகு காலை 8 மணி சிறப்பு காட்சிகளும், வழக்கம் போல தினசரி காட்சிகளும் நடைபெற்றன.

நேற்றைய முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் இதுவரை கிடைத்த தகவலின் படி 'விஸ்வாசம்' படம் தமிழ்நாடு முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்றும் 'பேட்ட' 20 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

பல ஊர்களில் பல தியேட்டர்களில் விஸ்வாசம் படத்திற்கு அதிகாலை 1 மணி சிறப்பு காட்சி நடைபெற்று உள்ளது. சராசரியாக டிக்கெட் விலை ரூ.700-1000 ரூபாய் விற்கப்பட்டுள்ளது. ஆனால் பேட்ட படத்திற்கு பல ஊர்களில் 4 மணிக்கு காட்சிக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விஸ்வாசம் படம் முதல்நாளாக ரூ.30 கோடி வரை வசூலித்ததாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்கார் படம் முதல்நாள் வசூலாக ரூ.25 கோடி வரை வசூலித்ததாக தகவல், இப்போது அந்த வசூலை விஸ்வாசம் முறியடித்திருக்கிறது. அதேசமயம் இந்தியாவின் பிறமாநிலங்களின் வசூல் மற்றும் உலகளவில் வசூலை கணக்கிட்டால் நிச்சயம் பேட்ட தான் முதலிடத்திற்கு வரும் என்பது ஆணித்தரமான உண்மை.

'பேட்ட' படத்தில் பழைய உற்சாகமான, ஸ்டைலிஷான ரஜினியைப் பார்ப்பது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. 'விஸ்வாசம்' படத்தில் அப்பா, மகள் சென்டிமென்ட் சிறப்பாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்தப் படங்களுக்கான சிறப்பம்சமாக ரசிகர்களிடம் பேசப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் அடுத்து வரும் விடுமுறை நாட்களில் வசூல் சாதனை புரிய இவை உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை