பிரசவத்தின்போது காலை மிக அழுத்தமாக இழுத்ததால் குழந்தையின் தலை துண்டிப்பு: ராஜஸ்தானில் கொடூரம்!

தினகரன்  தினகரன்
பிரசவத்தின்போது காலை மிக அழுத்தமாக இழுத்ததால் குழந்தையின் தலை துண்டிப்பு: ராஜஸ்தானில் கொடூரம்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது, காலை மிக அழுத்தமாக இழுத்ததால் குழந்தையின் தலை துண்டான கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்காரை சேர்ந்த திலோக்பதியின் மனைவி தீக்ஷா கன்வர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ராம்காரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் மற்றும் பெண் நர்சுகள் இல்லாத காரணத்தால் ஆண் நர்சுகள் அமிர்த்லால், ஜுன்ஜ்கார்சிங் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இந்நிலையில், பிரசவத்தின்போது வழக்கமான முறையில் முதலில் தலை வருவதற்கு பதிலாக அப்பெண்ணுக்கு முதலில் குழந்தையின் கால் வெளியே வந்துள்ளது.இதனால் பிரசவமாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆண் நர்சுகள் இருவரும் குழந்தையின் காலை மிக அழுத்தமாக இழுத்துள்ளனர். இதனால், குழந்தையின் தலை துண்டாகி தாயின் வயிற்றுக்குள்ளேயே இருந்துள்ளது. ஆனால் குழந்தையின் தலை துண்டாகி வயிற்றுக்குள் இருக்கும் வி‌ஷயத்தை தாயுக்கோ, உறவினருக்கோ சொல்லாமல், வெளியே வந்த உடலின் ஒரு பகுதியை மட்டும் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், குழந்தையின் தலை வயிற்றுக்குள் இருந்ததால் தீக்ஷா கன்வருடைய உடல்நிலை மோசமடைந்து, ஜெய்சல்மாரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அந்த ஆண் நர்சுகள் இருவரும் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், நஞ்சுக்கொடி வெளியே வராமல் வயிற்றுக்குள் இருப்பதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் தலை மட்டும் வயிற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, ஜோத்பூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. எனினும், தீக்ஷா கன்வர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் ஆண் நர்சுகளிடம் விசாரணை நடத்தியதில், பிரசவம் பார்த்தபோது அவர்கள் இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவர் மீதும், அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் தலைமறைவாகிவிட்டதை அடுத்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை