ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

புதுடெல்லி: இறைச்சி வியாபாரியிடம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யகோரிய ராகேஷ் அஸ்தானாவின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ.யின் முதல் 2 உயர் பதவியை வகிக்கும் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டனர். லல்லு பிரசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக அலோக் வர்மா மீதும், ஹைதராபாத்தை சேர்ந்த இறைச்சி வியாபாரி சனா பாபு என்பவரை வழக்கில் இருந்து விடுவிக்க அவரிடம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீதும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டனர். இதனை தொடர்ந்து சிபிஐ இயக்குனர் குற்றம் சாட்டிய வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், ராகேஷ் அஸ்தானா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரி வீட்டிலேயே சோதனை நடத்தியது இதுவே முதல்முறையாகும். சோதனையையடுத்து, இரு அதிகாரிகளிடையே பனிப்போர் முற்றியது. இதையடுத்து கடந்த அக்டொபர் மாதம் 23ம் தேதி இயக்குனர் அலோக் வர்மாவையும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அனுப்பிவைத்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலோக் வர்மா மீண்டும் நியமிக்கப்பட்டார். மேலும் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தன் மீது பதிவுசெய்யப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி நசீமி வசிறி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராகேஷ் அஸ்தானா மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இது ராகேஷ் அஸ்தானாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை