மத்திய தீயணைப்புத்துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்து, பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

தினகரன்  தினகரன்
மத்திய தீயணைப்புத்துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்து, பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

டெல்லி: மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார். சம்பவத்தின் பின்னணி சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு  இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை  சுமத்திக் கொண்டனர். இதனால், இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய  அரசு நடவடிக்கை எடுத்தது. தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ்  நியமிக்கப்பட்டார்.மேலும், ஊழல் குற்றச்சாட்டு குறித்து மத்திய ஊழல்  தடுப்பு கண்காணிப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியது. இந்த விவகாரம்  அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில்,  மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா  வழக்கு தொடர்ந்தார்.அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடரலாம் என உத்தரவு அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கட்டாய  விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடரலாம் என கடந்த 7ம் தேதி தீர்ப்பளித்தது. அதோடு,  ‘அலோக் வர்மா விஷயத்தில் எவ்வித கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது, அவரது  நியமனம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த  உத்தரவைத் தொடர்ந்து அலோக் வர்மா நேற்று முன்தினம் சிபிஐ இயக்குனர் பதவியை மீண்டும் ஏற்றார். 77 நாள் இடைவெளிக்குப் பிறகு அலுவலகத்திற்கு சென்ற அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.அலோக் வர்மாவின் பதவி பறிப்பு இந்நிலையில்,  அலோக் வர்மா விவகாரம் தொடர்பாக விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையிலான  தேர்வுக்குழு நேற்று முன்தினம் கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில்  எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே, உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பதிலாக மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர். முதல் நாள் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில்,  2ம் நாள் கூட்டம் நேற்று நடந்தது. தேர்வுக்குழு  கூட்ட ஆலோசனையில், அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பிரதமர்  மோடியும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியும் கூறியுள்ளனர். இதற்கு,  காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், பெரும்பான்மை அடிப்படையில் (2-1) அலோக் வர்மா பதவி நீக்கம்  செய்யப்பட்டுள்ளார். அலோக் வர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அவர் பதவி நீக்கம்  செய்யப்பட்ட விவகாரம் மீண்டும் புயலை கிளப்பியது. சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நேற்று இரவு மீண்டும் நியமித்து உத்தரவிட்டது.புதிய பதவிஉயர் பதவியான சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அலோக் வர்மா  தீயணைப்பு துறையின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.அலோக் வர்மா விளக்கம் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,\'என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரம் அற்றவை; சிபிஐயின் தனித்துவத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டேன்; சிபிஐ நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இருக்க கூடாது\', இவ்வாறு அவர் கூறினார். அலோக் வர்மா ராஜினாமா  இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு அலோக் வர்மா கடிதம் அனுப்பியுள்ளார். அதில் \'இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள்; தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் முன்பே கடந்துவிட்டேன். மீண்டும் முன்பே முடித்த பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல;\' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை