தமிழக கேரள எல்லையில் உலகிலேயே உயரமான சிவலிங்கம்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் பதிவு!

தினகரன்  தினகரன்
தமிழக கேரள எல்லையில் உலகிலேயே உயரமான சிவலிங்கம்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் பதிவு!

கன்னியாகுமரி: தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என்ற பெருமையுடன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியான உதயம்குளம்கரையில் செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இங்கு 111.2 அடியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்கும் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கியது. இதனிடையே, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இந்த சிலை இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின் சான்றிதழை ஆலய நிர்வாகியிடம் ஒப்படைத்தனர். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த சிவலிங்கத்தில், மொத்தம் எட்டு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கணபதி உட்பட பல கடவுள்களின் சிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும் மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடிக்கொண்டு இருப்பது போன்ற அழகிய சிலையுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆறு ஆண்டுகளாக 60 பேர் வடிவமைத்து வருகின்றனர். தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், மகா சிவராத்திரி அன்று இதனை திறக்க திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை