தகவல் சாதனங்களின் புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா

தினகரன்  தினகரன்
தகவல் சாதனங்களின் புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா

சிச்சுவான்: புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள க்ஷிசங் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.11 மணிக்கு ஸோங்ஸிங்-2டி (Zhongxing-2D) என பெயரிடப்பட்ட செயற்கைக்கோளைச் சுமந்தபடி லாங் மார்க்-3பி(Long March-3B) ராக்கெட் நெருப்பையும், புகையையும் உமிழ்ந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால் இதனை விண்ணில் ஏவும் பணிகள் முழுமையாக முடிய சுமார் 4 மணி நேரம் ஆனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் தொலைக்காட்சி, வானொலி போன்ற தகவல் சாதனங்களுடன் புவிசார் தொடர்புகளுக்காக செலுத்தப்படுகிறது. இதனை கடந்த 2017ம் ஆண்டே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஸோங்ஸிங்-9ஏ செயற்கைக்கோளுடன் இதன் பகுதியை விண்ணில் செலுத்தியபோது, திட்டமிட்டப்படி சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படாததால் இந்த திட்டம் தாமதமடைந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் சரியான சுற்றுவட்டப் பாதையில் ஸோங்ஸிங்-2டி செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஸோங்ஸிங்-2டி செயற்கைக்கோள் மற்றும் லாங் மார்க்-3 பி கேரியர் ராக்கெட் ஆகியவை, சீனாவின் ஏரோஸ்பேஸ் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை