மாநில அதிகாரிகளுடன் இன்றும், நாளையும் ஆலோசனை மக்களவை தேர்தல் தேதி பிப். இறுதியில் வெளியீடு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநில அதிகாரிகளுடன் இன்றும், நாளையும் ஆலோசனை மக்களவை தேர்தல் தேதி பிப். இறுதியில் வெளியீடு?

* தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் கட்சிகளுக்கு கெடுபிடி
* 14 பேர் கொண்ட கமிட்டி ஆணையத்திடம் பரிந்துரை

புதுடெல்லி : மக்களவை தேர்தல் தேதி அட்டவணை வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. முன்னதாக 14 பேர் கொண்ட கமிட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் சில பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக மோடி பதவியேற்றார். கடந்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக கருதப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மேக் இன் இந்தியா, கிளீன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் பாஜ கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைகிறது. இதனால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான, முன் தயாரிப்பு பணிகளில், தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்த வகையில், தலைநகர் டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இரண்டு நாள் கருத்தரங்கிற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் நடக்கும் கருத்தரங்கில், நாடாளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தேர்தல் அட்டவணை தயாரித்தல், இறுதிவாக்காளர் பட்டியல், தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகின்றன. மேலும், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின்

பேரவைக் காலம் ஜூன் 18, ஜூன் 11, ஜூன் 1, சிக்கிம்  மே 27ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மேற்கண்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.

மக்களவை தேர்தலை பொறுத்தவரை, கடந்த 3 மக்களவை தேர்தல்களாக பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, மே 2வது வாரத்துக்குள் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, புதிய அரசுகள் அமைக்கப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, 7 கட்டங்களாக ேதர்தல் நடத்தப்பட்டது.

அதேபோல், வருகிற மக்களவை தேர்தலை 7 கட்டங்களில் இருந்து, 10 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் குறைந்தது 10 நாட்கள் இடைவெளி தேவைப்படுகிறது.

10 கட்டங்களாக நடத்தும்பட்சத்தில், அதிகபட்சமாக 70 முதல் 100 நாட்கள் வரை ேதவைப்படுகிறது. மே 2வது வாரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், பிப்ரவரி கடையில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுவர் விளம்பரங்கள், தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் கள பிரசாரம் போலவே தற்போது அரசியல் கட்சிகளால் அதிக முக்கியத்துவம் கொண்டதாக டிஜிட்டல் பிரசாரம் உள்ளது. தேர்தல் வந்தால் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் கட்சிகள் தங்களின் விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிடுவது வழக்கம்.

மற்ற பிரசாரங்கள் போல, இணையதள பிரசாரத்திற்கு இன்னும் தேர்தல் ஆணையத்தால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை என்பதால், இந்த இணைய பிரசாரத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, சில விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2018 ஜனவரி 8ம் தேதி துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா தலைமையிலான 14 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டது. அதில், தேர்தல் ஆணையத்தின் 9 அதிகாரிகள், சட்டம், உள்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.இந்த குழு, இணையப் பிரசாரங்கள், கட்சிகளுக்கு எந்தளவுக்குப் பயனளிக்கிறதோ, அதே அளவுக்கு சமூக விரோதிகளுக்கும் பயனளிக்கின்றன. தேவையற்ற வதந்திகளைப் பரப்புதல், கட்சிகள் குறித்தும் தலைவர்கள் குறித்தும் போலிச் செய்திகள் பரப்புதல், வாக்காளர்களைக் கவர்வதற்காக, அவர்களின் தரவுகளை ஹேக் செய்தல் போன்ற சம்பவங்களும், தேர்தலை மையமாக வைத்து இணையத்தில் நடைபெறுகின்றன. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், முதற்கட்ட வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக, குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்கு முன்னர் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இணைய பிரசாரங்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கட்டுப்பாடுகள் குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை, கடந்த சில நாட்களுக்கு முன் உமேஷ் சின்ஹா குழு அளித்துள்ளதாக, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள், இணையம், கேபிள் சேனல்கள் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆன்லைன் பதிப்பு ஆகியன, தேர்தல் அமைதி நேரம் எனப்படும், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர இடைவௌியில் வாக்காளர்களை திசை திருப்பும் வகையாக விளம்பரம் செய்யக்கூடாது என்பது தான்.மேலும், தேர்தல் அறிக்கை வெளியிடுதல் தொடர்பாக, ​​அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை நிபந்தனைகள் கடுமையாக இல்லை. அதனால், கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக பாஜ கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

அதற்கு, தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அரசியல் கட்சிகள், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம், இணையம் மற்றும் மொபைல், பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப், டுவிட்டர் மற்றும் கூகுள் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னர், இந்த குழு அறிக்கை தயாரித்து, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதுதொடர்பாக, துணை தேர்தல் கமிஷனர் ​​உமேஷ் சின்ஹா ​​கூறுகையில், ‘‘சீலிட்ட கவரில், 14 பேர் கொண்ட குழுவின் கருத்துகள் அறிக்கையாக தயாரித்து, தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரங்களை தற்போது கூறமுடியாது’’ என்றார்.

.

மூலக்கதை