ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை : பூபேஷ் பகெல் தலைைமயிலான காங். அரசு அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை : பூபேஷ் பகெல் தலைைமயிலான காங். அரசு அதிரடி

ராய்ப்பூர் : ஆந்திரா, மேற்குவங்க மாநிலங்களை தொடர்ந்து, சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகெல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டம் 1946, பிரிவு 6ன் கீழ் தான் மத்திய புலனாய்வுத் துறை என்று கூறப்படும் சிபிஐயின் அதிகாரங்கள், எல்லைகள், மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் உள்ளன.

அச்சட்டத்தின் படி சிபிஐ அமைப்பானது டெல்லியில் எல்லைக்குள் தங்களின் அதிகாரங்களை சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் டெல்லியின் எல்லைக்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலங்களில் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அதிகாரங்களை செயல்படுத்தவோ சிபிஐக்கு உரிமை இல்லை.

சிபிஐக்கு உண்டான விசாரணை அதிகார பகிர்வு, அனுமதி ஆகியவை மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கருத்தொற்றுமை இருந்தால் மட்டுமே சாத்தியமாகிறது. மற்ற நேரங்களில் சிபிஐ மாநில எல்லைக்குள் வர அனுமதி மறுத்து, மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகளை சில மாநிலங்கள் மேற்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்குமுன், சிபிஐ ஆந்திர மாநில எல்லைக்குள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்த அளிக்கப்பட்ட தடையில்லா உத்தரவு அரசாணையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திரும்பப்பெற்றார்.

‘வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையை அரசியல் நோக்கத்துடன் மத்திய பாஜ அரசு செயல்படுத்தி வருகின்றது’ என்ற குற்றச்சாட்டினை முன் வைத்தார் சந்திரபாபு நாயுடு.

இவரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால், சந்திர பாபு நாயுடுவைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும், மேற்கு வங்கத்தில் நுழைய சிபிஐக்குத் தடை விதித்தார்.   இந்நிலையில், ரமண்சிங் தலைமையிலான பாஜ அரசு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டீஸ்கர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் பூபேஷ் பகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தற்போது நடக்கிறது.

இம்மாநில அரசு நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘விசாரணை என்ற பெயரில் சட்டீஸ்கர் மாநிலத்திற்குள் நுழையும் சிபிஐ அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னர், மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளது.

இதனை, சட்டீஸ்கர் அரசு அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது.
மத்திய பாஜ அரசு, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது ஆந்திரா, மேற்குவங்கம், சட்டீஸ்கர் மாநில அரசுகள் அடுத்தடுத்து தங்கள் மாநிலங்களில் சிபிஐ நுழைய தடை விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் மீது சிபிஐ வழக்கு

முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டீஸ்கர் போலீசார் பூபேஷ் பகெலின் நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான விநோத் வர்மாவை, செக்ஸ் சிடி விவகார வழக்கில் கைது செய்தனர்.

அவரிடமிருந்து பாஜ அமைச்சர் ஒருவரின் செக்ஸ் சிடிக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பூபேஷ் பகெலின் மீதும் வழக்கு பதிவானது.

சிபிஐ விசாரணைக்குப் பின் பூபேஷ் பகெல், பாஜ அமைச்சர் கைலாஷ் மொரார்கா உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக பாஜ அமைச்சர் கைலாஷ் மொரார்காவை உடனே கட்சியிலிருந்து நீக்கியது.

இதற்கிடையே, முதல்வர் பூபேஷ் பகெல் இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். ஜாமீனில் வெளியாவதை மறுத்து இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் இருந்தார்.

முதல்வர் பூபேஷ் மீதான சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அவரது தலைமையிலான அரசு, மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை