அனைத்துலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

மதுரைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. முத்தமிழ் வளர்த்த மதுரை எனலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த மதுரையில் அண்மையில், அனைத்துலகத் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு நடந்தது. இதனை வலைத்தமிழ் காணொலியாகவும் தந்தது. இதோ ஒரு நேர்முகப் பார்வை!

தமிழகத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பெரும் பதவிகளை வகித்தும், வெற்றிகரமாகத் தொழில் செய்தும் வருகிறார்கள். தாய்த்தமிழ் நாட்டிற்குத் தங்கள் நன்றிக்கடனை எப்படிச் செலுத்தப் போகிறோம் என அவர்களுக்கு ஏற்பட்ட  சிந்தனையின் விளைவாக,  மதுரையில் அனைத்துலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டை, கடந்த டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்தினர். புத்தாண்டின் புதிய தொடக்கமாக, ‘எழுமின்’ (The Rise) என்கிற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

மதுரை பில்லர் சென்டர் நிறுவனர் இம்மானுவேல் வரவேற்றுப் பேசினார். தமிழ்ச்சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படுத்த, பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கிற அனைவரையும் மையத்தின் சார்பில் வரவேற்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

வரவேற்று அடுத்து பேசிய ஜகத் கஸ்பார், இது நம்மால் நிகழும் நிகழ்வு என்றும் அயலகத்தில் இருந்து வந்துள்ள தொழிலதிபர்களை வரவேற்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
சி.கே.அசோக்குமார் தமது வரவேற்புரையில் கூறியதாவது:

தமிழர்கள் எல்லோரும் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்றார்கள். முன்னோர்கள் முறையாக வாழ்ந்து இருக்கிறார்கள். கல்வி, வேளாண்மை, நீர் மேலாண்மை, கட்டிடக்கலை போன்றவற்றில் முதன்மையாக விளங்கி இருக்கிறார்கள். குறிப்பிட வேண்டிய ஒன்று, அவர்கள் இயற்கையோடு ஒன்றுபட்டு வாழ்ந்தனர். இன்றோ வேலை தேடுபவர்களாக பலர் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.ராஜராஜ சோழனை கடாரம் கொண்டான் என்பார்கள். அப்படிப்பட்ட நாட்டைச் சேர்ந்த பலர் வேலை தேடி வெளிநாடு செல்வதைப் பார்க்கிறோம்.

மாநாட்டின் நோக்கமே, சமூகம் வளர பொருளாதாரம் வளர வேண்டும். மூலதனம் இருந்தால் பெரிய வளர்ச்சியை அடைய முடியும். இன்று தகவல் தொழில்நுட்பம் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாநாடு வேளாண்மை மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து புதிய சமுதாயம் உருவாக்குவோம்."இவ்வாறு அவர் பேசினார்

இந்த மாநாட்டுக் குழுவின் தலைவரும் ஹரியானா மாநில தலைமைச் செயலாளருமான தேவசகாயம் ஐ.ஏ.எஸ்., மகாகவி பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ``உலகப் பொருளாதாரச் சூழல் வேகமாக மாறி வருகிறது. படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

அவர்களுக்கு  நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனில், தொழில்முனைதலைத் தமிழர்கள் இடையே ஊக்கப்படுத்தி விரைவாக வளர்க்க வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார்.

மாநாட்டுக் குழுவின் இணைத் தலைவரும், முதன்மை வழிகாட்டியுமான மேற்குவங்க மாநிலக் கூடுதல் தலைமைச் செயலாளர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேசியதாவது:

 ``வேலை தேடும் வேலையை விட்டுவிட்டு, பலருக்கும் வேலை தரும் தொழில் முனைதலை உருவாக்குவதே இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம். பல்வேறு  நாடுகளிலிருந்து வந்திருக்கும் வெற்றித் தமிழர்களையும், தொழில் தொடங்கும் ஆர்வமும், ஆனால், முதலீட்டு வசதி இல்லாத லட்சியத் தமிழர்களையும் இந்த மாநாடு இணைக்கும். பல்வேறு தொழில், வணிக ஒப்பந்தங்கள் இந்த  மாநாட்டிலேயே நடந்தேற அதிக வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் காலை முக்கியமான அமர்வு நடந்தது. இந்த அமர்வினை அமர்க்களமாக நடத்தித் தந்தார் ‘எழுமின்’ மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான லதா பாண்டியராஜன். 

இந்த அமர்வில் பேசிய ஐக்கிய அரபு நாடுகளில் டெக்டான் குரூப் நிறுவனத்தை நடத்திவரும் தொழிலதிபர்            எஸ்.லட்சுமணனின் பேச்சு பலரது கவனத்தையும் கவர்ந்தது.
``என்னை வளர்த்த தமிழகத்துக்கு என்னால் முடிந்த தொழில் உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறேன். தண்ணீர் தொடர்பான தொழில் பற்றி நல்ல தொழில் ஐடியாவை வைத்திருப்பவர்களுக்கு நான் வழிகாட்டத் தயாராக இருக்கிறேன்’’ என்றவர், தான் வெற்றி பெற்ற கதையை  அருமையாக எடுத்துச் சொன்னார். 

‘‘எந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த வேலையை எப்போதும் பொறுப்புடன் கையாளவேண்டும். நிறுவனத்தின் பணியாளராக இருந்தாலும் அதைத் தங்களுடைய சொந்த வேலை போல செய்ய வேண்டும். கர்வம் என்ற ஒன்று நமக்கு எப்போதும் வரக்கூடாது. அப்போதுதான் தொடர்ந்து வெற்றி காண முடியும்’’ என்று அவர் கூறியதை நமது இளைஞர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

இந்த மாநாட்டில் பேசியவர்களின் குறிப்பிடத் தக்க இன்னொருவர் ஜப்பானில் ஐ.டி தொழில் நிறுவனத்தை நடத்திவரும் எஸ்.நடராஜன். 

‘‘ஐப்பானில் இருக்கும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் நம்முடைய இளைஞர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்திய இளைஞர்கள் புத்திசாலிகள், கஷ்டப்பட்டு உழைப்பதில் மிகச் சிறந்தவர்கள் என்று ஜப்பானியர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஜப்பானுக்குச் சென்று வேலை பார்க்க வேண்டும் என்றாலோ அல்லது பிசினஸ் செய்ய வேண்டும் என்றாலோ, ஐப்பானிய மொழியை அவசியம் படிக்க வேண்டும். சில மாதங்களிலேயே ஜப்பான் மொழியைப் கற்றுக்கொண்டு விடலாம். 

விவசாயத் துறைக்கு ஐப்பானிய அரசாங்கம் மிகவும் முக்கியத்துவம் தருகிறது. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் ஜப்பானுக்குச் சென்று நவீன விவசாய உத்திகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, இங்கு விவசாயப் பண்ணைகளைத் தொடங்கினால், நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்று குறிப்பிட்டார் அவர்.  

ஆச்சி மசாலா குரூப்பின் சேர்மன் பத்மசிங் ஐசக் இந்த அமர்வில் சிறப்புரை ஆற்றினார். ``வாழ்க்கையில் தேடல் என்பது அவசியம். அதுதான் வெற்றியை நமக்குத் தரும். அதுதான் தற்போது என்னை இந்தியாவில் `நம்பர் ஒன்’ கம்பெனியாக நிறுத்தியுள்ளது. உலக நாடுகள் வரிசை யில் நம்பர் ஒன்-ஆக வர வேண்டும் என்பதே எனது லட்சியம். வாழ்க்கையில் எளிய பாதையைத் தேர்வு செய்வதை விடக் கடினமான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நம்மை நாம் வளர்த்துக்கொள்ள முடியும்’’ என்றார்.
தமிழகத்  தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிறைவாகப் பேசினார்.

``தமிழகத்தில் ஐ போன், ஆப்பிள் கம்ப்யூட்டர் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்து உள்ளார். வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ள உலக முதலீட்டாளர்கள் கருத்தரங்கில், சென்ற ஆண்டைவிட அதிகமான முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  

அதிகப்படியான வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்க இது போன்ற மாநாடு உரிய வழிகளைக் காட்டும். சீனாவைப்போல, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் வந்து தொழில் தொடங்கவேண்டும். இதன்மூலம் மிகப்பெரிய தொழில் புரட்சி தமிழகத்தில் மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

வெளிநாட்டில் உள்ள தமிழ் தொழிலதிபர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம்தான். 

புதிய தொழில்முனைவர்கள் தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யும் நீட்ஸ்  திட்டம் குறித்து பல இளைஞர்களுக்குத் தெரியவில்லை. தமிழகம் முழுக்க 600 இளைஞர்களே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளனர்’’ என்றார்.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், கெர்ரி இன்டெவ் லாஜிஸ்ட்டிக்ஸ் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் விமலா பிரிட்டோ,  முகம்மது ஈகியா, ஏ.என்.சொக்கலிங்கம், கிரகரி,  மலேசியத் தொழிலதிபர் டத்தோ ஏ.பி.சிவம், கத்தார் நாட்டுத் தொழிலதிபர் ஆல்ஃபிரட் பெர்க்மன்ஸ், ஓமான் நாட்டுத் தொழிலதிபர் ஜோஸ் மைக்கில் ராபின், தென் ஆப்பிரிக்கத் தொழிலதிபர் பிரகி பிள்ளை, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கானா நாட்டுத் தொழிலதிபர் எழிலரசன், முருகேசன் உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் பேசினார்கள்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர்கள்  40 பேரும், குறுந்தொழில்புரிவோர் சுமார் 200 பேரும், பெரியதாக வளர வாய்ப்புள்ள தொடக்கநிலைத் தொழில்முனைவர் சுமார் 170 பேர் என, 410 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மூலக்கதை