சபரிமலை விவகாரத்தில் வன்முறையை ஏற்படுத்த சங்பரிவார் அமைப்புகள் முயற்சி : முதல்வர் பினராயி விஜயன்

தினகரன்  தினகரன்
சபரிமலை விவகாரத்தில் வன்முறையை ஏற்படுத்த சங்பரிவார் அமைப்புகள் முயற்சி : முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரத்தில் வன்முறையை ஏற்படுத்த சங்பரிவார் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது வன்முறையும் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக மாநில ஆளுநர் சதாசிவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை அனுப்பியுள்ளார்.கடந்த 9ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட இந்த அறிக்கையில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கோவில் திறக்கப்பட்ட போது 5 பத்திரிக்கையாளர்கள் உட்பட 30 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையே மோதலை தூண்டிவிட சதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், இது தொடர்பான சிடிக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். வன்முறைக்கு காரணமாக 10, 024 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 9 ஆயிரத்து 193 பேர் சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 2012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தால் 2 கோடியே 32 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை