2021ம் ஆண்டு டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்புவோம் : இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி

தினகரன்  தினகரன்
2021ம் ஆண்டு டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்புவோம் : இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி

பெங்களூரு : 2021ம் ஆண்டு டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அளித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. பலவிதமான செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி தகவல்களை சேகரித்து வருகிறோம். அவ்வகையில் சந்திரனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது நிலவில் இருக்கும் நிலப்பரப்பை ஆய்வு செய்து தகவல் அனுப்பும் திறன் கொண்டது. இதன் மற்றுரொரு பாகமான சந்திராயன் 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் சந்திராயன் 2 திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், \'2019ம் ஆண்டில் சந்திராயன் 2 இஸ்ரோவின் மிக முக்கியமான சாதனையாக அமையும். ஜி.எஸ்.எல்.வி மாக்3டி ராக்கெட் மூலம் சந்திராயன் 2 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வேறு எந்த நாட்டு ஆய்வுக் கலமும் சந்திரனில் இறங்காத இடத்தில் இந்தியா ஆய்வுக் கலத்தை இறக்கும். சந்திராயன் 2 திட்டத்திற்கான அனைத்து பாகங்களும் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் ஜி.எஸ்.எல்.வி மாக்3டி ராக்கெட் தான் பயன்படுத்தப்பட உள்ளது\' என்றார். இதனைத்தொடர்ந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கினார். அப்போது ககன்யான் என்ற திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக இஸ்ரோ தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றார். மேலும் விண்வெளிக்கு இந்தியரை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ககன்யான் திட்டம் குறித்து ஆராய டாக்டர் உன்னிகிருஷ்ணன் நாயர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதல் ஆளில்லா விண்கலத்தை டிசம்பர் 2020க்குள் விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  இரண்டாவது ஆளில்லா விண்கலம் ஜூலை 2021க்குள் விண்வெளிக்கு ஏவப்படும் என குறிப்பிட்டார். தொடர்ந்து,  2021ம் ஆண்டு டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்ப உள்ளதாகவும் அவர் உறுதிப்பட கூறினார். இதனிடையே 2019ம் ஆண்டு இஸ்ரோ 32 ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த உள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை