சென்னை தியாகராய நகரில் சென்னை சில்க்ஸ் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சென்னை தியாகராய நகரில் சென்னை சில்க்ஸ் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீவிபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்த நிலையில், அங்கு மீண்டும் கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டப்படுவதில் விதி மீறல்கள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 420 கோடி ரூபாய் அளவிற்கு பொருட்கள் எரிந்து நாசாமாகின. மேலும் தீயில் எறிந்த கட்டிடத்தை இடிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து, பின்பு அந்த கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுடவதற்கான அனுமதியை பெற்று, கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, அந்த கட்டிடம் முறையான அனுமதி பெறாமல் விதிமீறி கட்டப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த கண்ணன் பாலசந்தர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கண்ணன் பாலசந்தர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிதாக கட்டப்படும் கட்டிடம் முறையான அனுமதி இல்லாமல் விதிமீறி கட்டப்படுவதாவும், இதனால் கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது வாதங்களை முன்வைத்தார். இதற்கு சென்னை சில்க்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் பராசரன், அனைத்து அனுமதிகளையும் பெற்று தான் புதிய கட்டிடத்தை கட்டி வருவதாகவும், இதனால் தடை விதிக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கண்ணன் பாலசந்தர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சென்னை சில்க்ஸ் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

மூலக்கதை