சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை ரகசியமாக ஆய்வு

PARIS TAMIL  PARIS TAMIL
சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை ரகசியமாக ஆய்வு

ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் விசாரணை ஆணையம் ரகசியமாக ஆய்வு செய்துள்ளது. இது அப்பல்லோ, சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் பலர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யவும், அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலத்தை சரிபார்க்கவும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள ஆணையத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.

மருத்துவ நிபுணர்கள் குழு ஏற்படுத்தப்படாததால் அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுவதாகவும், எனவே, அரசு ஏற்கனவே அனுமதி அளித்தபடி ஆணையத்துக்கென தனியாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பல்லோ நிர்வாகம் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு தாக்கல் செய்தது.

அதேபோன்று அப்பல்லோ மருத்துவர்கள், பணியாளர்கள் வாக்குமூலம் அளிக்கும்போது அதை வீடியோ எடுத்து பதிவு செய்யவேண்டும் என்றும், தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவர் மதன்குமாரின் வாக்குமூலத்தை திருத்தம் செய்யவேண்டும் என்றும் அப்பல்லோ நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையத்தின் வக்கீல் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘விசாரணை ஆணையத்துக்கென தனியாக சிறப்பு மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டு அந்தக்குழு ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்துள்ளது. அந்தக்குழுவில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆர்.நந்தகுமார், எம்.சிவராமன், பயோ கெமிஸ்ட்டிஸ்ட் மரகதம், இதய நோய் தடுப்பு சிறப்பு நிபுணர் எம்.நந்தகுமரன், கதிரியக்க மருத்துவர் ரவி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். என்ன நோக்கத்துக்காக அவர்களது சேவை தேவைப்பட்டதோ அதற்காக அவர்களை பயன்படுத்தி கொண்டோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் குழுவை அமைத்து ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை ஆணையம் ரகசியமாக ஆய்வு செய்துள்ளது. நேற்று ஆணையத்தின் வக்கீல் பதில் மனு தாக்கல் செய்யும்வரை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சசிகலா தரப்புக்கு மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது தெரியாது. இதனால், ஆணையத்தின் பதில் மனு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘ஆணையத்தின் செயலாளர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று ஏற்கனவே குற்றம்சாட்டி உள்ளோம். மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது குறித்து ஆணையத்தின் வக்கீலுக்கு தெரிந்திருக்கும்போது வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆணையம் தரப்பில் மருத்துவர்கள் குழு குறித்து எங்களுக்கு தெரிவிக்காதது பாரபட்சமானது’ என்று சசிகலா தரப்பில் பதில் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்காக நேற்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பவர்களிடம் அன்றைய தினமே சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை மேற்கொள்வார்.

ஒரு வழக்கு விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் தன்னால் ஆணையத்தில் ஆஜராக இயலாது என்று சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்ததால் விஜயபாஸ்கர் நேற்று ஆஜராக தேவையில்லை என்று அவருக்கு ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. மற்றொரு நாளில் ஆஜராக அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது

மூலக்கதை