ஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய கோப்பை கால்பந்து இந்தியாஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை

அபுதாபி:  ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

அனைத்து அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.

சர்வதேச தரவரிசை பட்டியலில் 97வது இடத்தில் இந்திய அணி உள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், தரவரிசையில் 79வது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் முனைப்புடன் செயல்படும்.

முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. உள்ளூரில் போட்டி நடைபெறுவதால், ஐக்கிய அரபு அமீரக அணி உற்சாகத்துடன் விளையாடும்.

எனவே, இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்திய அணி வெற்றியை தொடரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு அமீரக கால்பந்து சங்கம் உள்ளூர் ரசிகர்களுக்கு 5,000 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9. 30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும், இன்று நடைபெறும் லீக் போட்டிகளில், பக்ரைன்-தாய்லாந்து அணிகளும், ஜோர்டான்-சிரியா அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன.    நேற்று நடந்த போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் துர்க்மெனிஸ்தான் அணியை வீழ்த்தியது.


.

மூலக்கதை