பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள், டிவி சேனல்கள் ஒளிபரப்ப தடை நீடிக்கும் : பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள், டிவி சேனல்கள் ஒளிபரப்ப தடை நீடிக்கும் : பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதை தடை செய்யக் கோரி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் டிவி சேனல்களை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் உத்தரவிட்டார். மேலும் இந்தியா பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை குறைத்துள்ள நிலையில், நாம் ஏன் அவர்களுடைய சேனல்களுக்கு தடை விதிக்கக்கூடாது என கேள்வியும் எழுப்பினார். இதையடுத்து பாகிஸ்தான் ஊடன ஒழுங்குமுறை ஆணையம் இந்திய சேனல்களை முடக்க உத்தரவிட்டிருந்தது. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மனுவில் இந்திய டிவி சேனல்கள் பாகிஸ்தானின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அனைத்து இந்திய சேனல்கள் மீதான தடை தொடரும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலிகளில் இந்திய தொடர்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு லாகூர் உயர்நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை