இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திரா நீக்கம்

தினகரன்  தினகரன்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திரா நீக்கம்

புதுடெல்லி: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு இந்திய அணி ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் எதிர்பார்த்தபடி வெற்றிகளை குவிக்கத் தவறியது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் பதக்கம் வெல்லத் தவறிய இந்தியா, இந்தோனேசியாவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய நிலையில் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரிலும் கால் இறுதியுடன் வெளியேறியது. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஹரேந்திரா சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் இனி இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஹாக்கி இந்தியா நிர்வாகம், உயர் செயல்பாட்டு இயக்குனர் டேவிட் ஜான் மற்றும் புள்ளிவிவர ஆய்வு பயிற்சியாளர் கிறிஸ் சிரியல்லோ இருவரும் தற்காலிகமாக அணியின் பயிற்சியாளர் பொறுப்பை வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு மிக விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகவும், மார்ச் மாதம் நடைபெற உள்ள சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் அவர் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை