பொருட்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள் உலக பொருளாதார கூட்டமைப்பு ஆய்வறிக்கை வெளியீடு

தினமலர்  தினமலர்
பொருட்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள் உலக பொருளாதார கூட்டமைப்பு ஆய்வறிக்கை வெளியீடு

புதுடில்லி:‘இந்தியா, 2030ல், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்கும்’ என, உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பு, ‘நுகர்வோர் சந்தையின் வேகமான வளர்ச்சியில், இந்தியாவின் எதிர்கால நுகர்வு’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்திய மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க, தற்போது, 15 லட்சம் கோடி டாலர், அதாவது, 1,050 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகின்றனர்.இது, 2030ல், 4,200 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதன் மூலம், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக, இந்தியா உருவெடுக்கும். முதல் இரண்டு இடங்களில், அமெரிக்கா, சீனா ஆகியவை இருக்கும்.


சவால்கள்


இந்தியா தற்போது ஆண்டுக்கு, சராசரியாக, 7.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன், ஆறாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 60 சதவீத பங்களிப்பை, தனியார் நுகர்வு பிரிவு வழங்குகிறது. இது, 2030ல், 6 லட்சம் கோடி டாலர் நுகர்வு சந்தையை உருவாக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.


உலகளவில் மிகவும் உத்வேகமான நுகர்வு சூழல் உள்ள நாடுகளில் ஒன்றாக, இந்தியா தொடர்ந்து இருக்கும்.அதேசமயம், நுகர்வு கலாசாரம் அனைத்து மக்களையும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, தனியார் மற்றும் பொதுத் துறை முன்னணி நிறுவனங்களுக்கு உள்ளது.அது மட்டுமின்றி, சமூகத்தில் உருவாகும் முக்கிய சவால்களுக்கும் தீர்வு காண வேண்டும்.


இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினருக்கு வேவைவாய்ப்பு, ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றை உருவாக்கவும், கிராமப்புறங்களின் சமூக, பொருளாதாரத்தை முன்னேற்றுவது முக்கியம்.


கட்டமைப்பு வசதி


அதிக மக்கள் தொகையுள்ள நகரங்கள், வளர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான ஊரக நகரங்கள் ஆகியவை, எதிர்கால நுகர்வு வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும்.இந்தியாவின் முக்கிய, 40 நகரங்கள், 2030ல், 1.50 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள நுகர்வு சந்தையை உருவாக்க துணை புரியும்.வளர்ச்சி அடைந்த ஊரகப் பகுதிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.


அமைப்பு சார்ந்த மற்றும் வலைதள சில்லரை விற்பனைக்கு வழி வகுப்பதும் அவசியம். அவ்வாறு செய்தால், நுகர்வோர் செலவினம், 1.20 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில், 30 முக்கிய நகரங்களில் உள்ள, 5,100 குடும்பங்கள்; பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, 40 நிறுவனங்களின் தலைவர்களிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


பொருளாதார வளர்ச்சி


இந்தியாவில், நுகர்வும், முதலீடும் அதிகரித்து வருகிறது. அதனால், உலகளவில் வேகமான வளர்ச்சி கண்டு வரும் நாடாக, இந்தியா தொடர்ந்து நீடிக்கும்.நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்கும். இது, அடுத்த இரு நிதியாண்டுகளில், 7.5 சதவீதமாக அதிகரிக்கும்.கடந்த ஆண்டு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பு மற்றும் வரும் ஆண்டில், 6.2 சதவீதமாக குறையும். வரும், 2021ல், 6 சதவீதமாக சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


– உலக வங்கி அறிக்கை

மூலக்கதை