‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம்

தினமலர்  தினமலர்
‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம்

புதுடில்லி:மத்திய அரசு, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம், வரும் நிதியாண்டில், 7,000 கோடி ரூபாய் திரட்டதிட்டமிட்டுள்ளது.


இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஏர் இந்தியா, 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 76 சதவீத பங்கு மூலதனம் மேற்கொண்டுள்ளது. இப்பங்குகளை விற்று, நிர்வாகப் பொறுப்பை, தனியாரிடம் ஒப்படைக்க, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.


ஆனால், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மற்றும் 8,000 கோடி ரூபாய் கடன் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையால், ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.இதையடுத்து, ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்கள் மற்றும் அசையா சொத்துக்களை விற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வரும், 2019 -– 20ம் நிதியாண்டின், முதல் அரையாண்டில், ஏர் இந்தியா நிறுவன பங்கு விற்பனை மூலம், 7,000 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, ஏர் இந்தியாவை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், 2,345 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு, சமீபத்தில் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை