மல்லிகை, முல்லை விலை உயர்வு

தினமலர்  தினமலர்
மல்லிகை, முல்லை விலை உயர்வு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதியில், மல்லிகை, முல்லைப் பூக்கள் விளைச்சல் குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, செக்கணம், மேட்டு திருகாம்புலியூர், காட்டூர், தாராபுரத்தனுார், குச்சிப்பட்டி, கோவக்குளம், மகிளிப்பட்டி, தாளியாம்பட்டி பகுதிகளில், விவசாயிகள் பரவலாக, பல்வேறு பூக்களை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில், சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிப் பொழிவு காரணமாக, மல்லிகை, முல்லைப் பூக்கள் விளைச்சல் குறைந்தது.


இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பூ சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:கடந்த மாதத்தில், பூக்கள் விளைச்சல் அதிகமாக இருந்தது. இந்த மாதம் அதிக பனிப் பொழிவு காரணமாக, செடிகளில் பூக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. சீசன் சமயத்தில், ஒரு நாளைக்கு, 1 ஏக்கரில், 10 கிலோ வரை, பூக்கள் எடுக்கப்படும். இந்த மாதத்தில், நாள் ஒன்றுக்கு, 1 ஏக்கருக்கு, 2 கிலோ வரை தான் பூக்கள் கிடைக்கின்றன. விளைச்சல் குறைந்ததால், 1 கிலோ மல்லிகை, 1,000 ரூபாய்; முல்லை, 1 கிலோ, 500 ரூபாய் வரை விற்பனையாகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கரில் பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நான்கு நாட்களுக்கு முன், கிலோ, 2,900 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, மூன்று நாட்களாக விலை குறைந்த கொண்டே வருவதால், விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.


நேற்றைய நிலவரப்படி மல்லிகை பூ கிலோ, 1,400 முதல், 1,600 ரூபாய்க்கும்; முல்லை, 680 முதல், 760 ரூபாய்க்கும்; கனகாம்பரம், 350 முதல், 400 ரூபாய்க்கும்; காக்கடா, 400 முதல், 480 ரூபாய்க்கும் விற்பனையாகின.

மூலக்கதை