காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட அறிக்கையை தமிழக அரசின் ஒப்புதலுக்கு பொதுப்பணித் துறை அனுப்பியது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு பொதுப்பணித்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் சில காலகட்டங்களில் வறட்சி ஏற்படுகிறது.  இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்,  காவிரி - வைகை- குண்டாறு; பெண்ணையாறு - பாலாறு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு), காவிரி (மேட்டூர் அணை) சரபங்கா உள்ளிட்ட பல ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்த அறிவிப்பை, 2012ல் தமிழக அரசு அறிவித்தது. 

இதில், '‘காவிரி - -வைகை இணைப்பு திட்டத்திற்கு, 258 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் அமைக்க, ரூ.5,166 கோடி தேவை’’ என, மதிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆனால்,  அந்த அறிக்கையில் குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2014ல், இந்த திட்டத்திற்கு நிதி பெற மீண்டும் அறிக்கை தயாரிக்கும் பணியில் பொதுப்பணித்துறை இறங்கியது. 

இந்த நிலையில் நில ஆர்ஜித சட்டம் கொண்டு வரப்பட்டதால், அந்த திட்டத்தின் படி நிதி கூடுதல் ஆகும் என்பதால் அதற்கேற்றாற்போல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி, பெரும்பாலும் அரசு நிலங்கள் வழியாக இந்த திட்டத்தை கொண்டு செல்லும் வகையில் ஒரு சில மாற்றங்களுடன் அறிக்கை தயாரிக்கும் பணியை கடந்த 6 மாதங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

அவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கையின் படி தற்போது ₹7 ஆயிரம் கோடி செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. 
இதைத் தொடர்ந்து அந்த அறிக்கையை தமிழக அரசின் ஒப்புதலுக்கு பொதுப்பணித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியைப் பெறும் வகையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

தற்போது நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதால் இந்த திட்டத்தில் நிதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘பழைய திட்டஅறிக்கையின் படி 258 கி.மீட்டர் தூரத்திற்கு, இந்த  காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்ட அறிக்கையின் படி ₹2 ஆயிரம் கோடி கூடுதலாகியுள்ளது. மற்றப்படி பழைய திட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும். மத்திய அரசு நிதி தர மறுத்தால் நபார்டு அல்லது ஜப்பான் நாட்டின் கடனுதவி கேட்க அடுத்தகட்டமாக முடிவு செய்யப்படும்’ என்றார்.  

மூலக்கதை