டெஸ்டில் சாதனை வெற்றி இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெஸ்டில் சாதனை வெற்றி இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை

புதுடெல்லி:  ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4   போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. சுமார் 71 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

இந்திய அணியின் வரலாற்று சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய அணியின் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வீரர்களும் போட்டியில் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. லெவன் அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சமும், ரிசர்வ் வீரர்களுக்கு தலா ரூ. 7. 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சமும், மற்ற ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய வீரர் புஜாரா 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி ரன் குவித்த புஜாரா தொடர் நாயகன் விருது பெற்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஐசிசி தரவரிசையில் புஜாரா 881 புள்ளிகளுடன் முதன்முறையாக 3வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடரில் 282 ரன் குவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷாப் பன்ட் 7 இன்னிங்சில் 350 ரன்கள் குவித்ததை தொடர்ந்து,  21 இடங்கள் முன்னேறி டாப் 20ல் நுழைந்துள்ளார். அவர் 673 புள்ளிகளுடன் 17வது இடத்தை பிடித்துள்ளார்.

அதிக புள்ளிகள் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் ரிஷாப்புக்கு கிடைத்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி அதிகபட்சமாக 662 புள்ளிகள் பெற்றுள்ளதுடன் 19வது ரேங்க் வரை முன்னேறி இருந்தார்.

தரவரிசையில் தோனியின் சாதனைகளை ரிஷாப் முறியடித்துள்ளார்.
 
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (794 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார்.


தென்னாப்ரிக்காவின் காகிசோ ரபாடா (893), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), பேட் கம்மின்ஸ் (ஆஸி. ), வெர்னான் பிலேண்டர் (தென்னாப்ரிக்கா) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர். அஷ்வின் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பூம்ரா 16வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

.

மூலக்கதை