உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைத்தார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைத்தார்

உலகத் தமிழர் திருநாள் விழா - உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் 5 ஆம் ஆண்டு மாநாடு 2019 சனவரி 5,6 ஆகிய நாட்களில் கலைவாணர் அரங்கம் சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டினைத் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைத்து பேருரை ஆற்றினார்.உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.செல்வகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளில் பலத்துரைகளில் சாதனைப் புரிந்த ஆறு பேருக்குச் சாதனைத் தமிழன் விருதும் ஆசிரியப் பணியில் சாதனைப் புரிந்த ஐவருக்கு நல்லாசான் விருதும் வழங்கப்பட்டது. சாதனைத் தமிழன் விருதினை ஆளுநர் அவர்களும் நல்லாசான் விருதினை மலேசிய மேனாள் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் அவர்களும் வழங்கி சிறப்பித்தனர்.

           சாதனைத் தமிழன் விருது:  1.  சிறுமி உமையாள் மெய்யம்மை (சென்னை), 2. இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இராம் பிரசாத் மனோகர், 3. தொழிலதிபர் இரவி குருதாசன்( கனடா), 4. சித்ரா தேவி இராமையா (தூதர், மலேசிய தூதரகம் போலந்து) 5. தொழிலதிபர் இலட்சுமணன்(சென்னை) 6. ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி செயல் தலைவர் முனைவர்  இராஜாமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நல்லாசான் விருதினைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரிரியர்களான 1.திரு. பகவான்,2. திருமதி இந்திரா. 3. திருமதி பிரேமா, 4. திரு. சக்திவேல் மற்றும் 5. உயர்கல்வித்துறையின் சார்பில் அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களோடும் தமிழ்ச் சங்கங்களோடும் இணைந்து பாடுபட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

      மாநாட்டில் தமிழ்ப்  பாரம்பரியத்தினைப் போற்றும் வகையில் தமிழிசை நிகழ்ச்சி, தற்காப்புக்கலை, நாட்டியம், தமிழ்ப் பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு, தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய  கலைநிகழ்ச்சிகளும் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. கற்காலம் முதல் தற்காலம் வரை தமிழரின் வாழ்வியல் சார்ந்த ஓவியங்களும் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன. பழந்தமிழரின் மருத்துவம், வாழ்வியல், நீர் மேலாண்மை ஆகிய குறுப்படங்களும் திரையிடப்பட்டன..

       சிறப்பு விருந்தினர்களாக வி.ஐ. டி . வேந்தார் திரு. விஸ்வநாதன், எஸ். ஆர். எம். குழுமம் தலைவர் திரு. ரவி பச்சமுத்து, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் திரு. ஐசரி கணேஷ், மீசாட்சி மிசன் மருத்துவமனை தலைவர் மரு. குருஷங்கர்,டாகடர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ. சி. சண்முகம், தரணி நிறுவனங்களின் நிருவனர் முனைவர் பழனி ஜி. பெரியசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  ம.தி.மு.க. தலைவர் திரு. வைகோ, வி.சி.க. தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், திரு. பீட்டர் அல்போன்ஸ்( காங்கிரஸ்), மலேசிய சட்டமன்ற துணை சபாநாயகர் திரு. எம். இரவி,  திரு. ஒரிசா பாலு, திரைப்பட நடிகர் பொண்வண்ணன்,  திரு. கோபிநாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  

       மாநாட்டின் நிறைவு விழாவில் கேரள மாநில மாண்புமிகு ஆளுநர் உயர்திரு சதாசிவம் அவர்கள் மின்னியல் பல்கலைக்கழகத்தை(World Tamil Digital University) தொடங்கி வைத்தும், விழா மலரை வெளியிட்டும் நிறைவுவிழாப் பேருரை ஆற்றினார்.

     இறுதியாக இம்மாநட்டின் தீர்மானங்களை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  திரு ஜெ. செல்வகுமார் அவர்கள் வாசித்தார்.  1. அயல்நாட்டுத் தமிழர்களுக்கு என தனி வாரியம் அமைத்தல், 2. அயல்நாட்டுத் தமிழர்களுக்காக ஒரு தனி இராஜ சபா உறுப்பினர் நியமனம் ,3. அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் வம்சாவளி என அடையாள அட்டை வழங்க வழிவகை செய்தல், 4.  தமிழ் கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்தல், 5.அயல்நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில்  பயிற்சி அளிக்க அனுபவமிக்க ஆசிரியர்களை தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்க அரசு வழிவகை செய்தல், ஆகிய ஐந்து தீர்மானங்கள்  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு மத்திய மாநில அரசுகளுக்குப் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.மாநாட்டின் நிகழ்ச்சியினை திருமதி ரோகிணி அவர்கள் தொகுத்து வழங்கினார். திரு ஜான் தன்ராஜ் அவர்கள் நன்றிவுரை ஆற்றினார்.

      இம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, கம்போடியா, இந்தோனேசியா, போன்ற நாடுகளில் இருந்து சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழறிஞர் பெருமக்கள் என சுமார் இரண்டயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

 

படசெய்தி : இடமிருந்து மீசாட்சி மிசன் மருத்துவமனை தலைவர் மரு. குருஷங்கர்,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ. சி. சண்முகம், மாண்புமிகு கேரள ஆளுநர் சதாசிவம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் திரு. ஜெ. செல்வகுமார்,தரணி நிறுவனங்களின் நிருவனர் முனைவர் பழனி ஜி. பெரியசாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேரா. முனைவர் கு. சிதம்பரம், உலகத் தமிழ் வர்த்தக சங்க நெறியாளர்  திரு, ஜான் தன்ராஜ் ஆகியோர்,

 

 

 

மூலக்கதை