போதை மருந்து புகாரில் வேன் ரூனி கைது?: செய்தி தொடர்பாளர் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
போதை மருந்து புகாரில் வேன் ரூனி கைது?: செய்தி தொடர்பாளர் விளக்கம்

வாஷிங்டன்: இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வேன் ரூனி, போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக கடந்த மாதம் அமெரிக்காவில் ைகதான சம்பவம் குறித்து அவரது செய்தி தொடர்பாளர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘டாக்டர் பரிந்துரைத்த தூக்க மாத்திரைகளுடன் அவர் மது அருந்தியிருந்தார்’ என்று கூறியுள்ளார். இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பின் முன்னாள் நட்சத்திர வீரருமான வேன் ரூனி, தற்போது அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் சாக்கர் தொடரில் டிசி யுனைட்டட் அணியில் இடம்பெற்று ஆடவுள்ளார்.

இதற்கான பயிற்சி மற்றும் மற்ற பணிகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி, வேன் ரூனி அமெரிக்கா சென்றார். முன்னதாக இங்கிலாந்தில் இருந்து, விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சவுதி அரேபியா சென்றிருந்த ரூனி, அங்கிருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு விமானத்தில் சென்றார்.

அளவுக்கு அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததாக அப்போது, வாஷிங்டனின் டல்லஸ் ஏர்போர்ட்டில் அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து வெர்ஜினியா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அபராதத் தொகை செலுத்திய பின்னர், அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த செய்தி அமெரிக்க பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளியாகி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வேன் ரூனியின் செய்தித் தொடர்பாளர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘டாக்டர் பரிந்துரைத்த தூக்க மாத்திரைகளுடன், விமான பயணத்தின் போது, வேன் ரூனி மது அருந்தியிருந்தார்.

அதனால் அவர் போதையில் இருந்ததாக பதிவானது. சட்ட மீறல் என்ற சிறிய குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் அவர் அபராதம் செலுத்தியதும், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதோடு இந்தப் பிரச்னை முடிந்து விட்டது.

இந்த விசாரணையின் போது, தன்னிடம் அதிகாரிகள் நடந்து கொண்ட முறைகள் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.

ரூனி தற்போது இடம் பெற்றுள்ள டிசி யுனைட்டட் கிளப் நிர்வாகமும், தங்கள் கவனத்திற்கு இந்த விஷயம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

‘‘இந்த விவகாரத்தில் ஊடகங்களின் ஆர்வத்தை புரிந்து கொள்கிறோம். அதே நேரம் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் நாங்கள் அவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டோம்.

இது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட விவகாரம்’’ என்று டிசி யுனைட்டட் கிளப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக வேன் ரூனி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.

அதனால் அவருக்கு கார் ஓட்ட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேஜர் லீக் சாக்கர் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அது தொடர்பாக கவனம் செலுத்த உள்ளதாக வேன் ரூனி தெரிவித்துள்ளார்.   33 வயதாகும் வேன் ரூனி, டிசி யுனைட்டட் கிளப்புக்காக மிகப்பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேஜர் லீக் சாக்கர் போட்டிகள் வாஷிங்டனில் வரும் மார்ச் 3ம் தேதி துவங்க உள்ளன. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான அட்லாண்டா அணியை எதிர்த்து, டிசி யுனைட்டட் மோதவுள்ளது.


.

மூலக்கதை