தமிழ்மொழியைக் கவுரவிக்கும் சிங்கப்பூர் அரசு...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று மகாகவி பாரதி பாடினான்.

"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்றும், " தமிழுக்கும் அமுதென்று பேர்" என்றும் பாரதி தாசன் போற்றிய மொழி தமிழ் ஆகும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்றும், மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள் என்றும் கூறினால் அதில் மிகையில்லை. தமிழில் இருந்து பிறந்தவைகளே பிற மொழிகள்!

ஆனால் இன்றைக்கு நிலை என்ன? 2 கன்னடர்கள் சந்தித்தால் கன்னடத்தில் பேசிக் கொள்வார்கள். 2 தெலுங்கர்கள் சந்தித்தால் தெலுங்கில் பேசிக் கொள்வார்கள். 2 இந்திக்காரர்கள் சந்தித்தால் இந்தியில் தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் 2 தமிழர்கள் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்பது புகழ் பெற்ற நகைச்சுவை மட்டுமல்ல, நாம் சந்திக்கும் கசப்பான உண்மையும் கூட. 

தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் நிலை தேய்பிறையாகிக் கொண்டிருக்க, சிங்கப்பூர் அரசோ தமிழ் மொழியைக் கவுரவித்துப் போற்றி வருகிறது. இதனை அவசியம் ஒவ்வொரு தமிழனும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், கடைகள் போன்ற வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்தது. இதைத் தமிழில் எழுத அரசு சட்டம் இயற்றிய பின்னரே தமிழில் எழுதும் நிலை வந்தது.

இதேபோல் தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என அறிவித்துத் தான் தமிழைக் காக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்குள்ள கல்விக்கூடங்களிலும் தாய்மொழியாக தமிழ் சொல்லித் தரப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் பணத்தாள்களில் தமிழ் மொழியும் இடம்பெற்று உள்ளது.

இந்த நிலையில் "சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ் சமூகத்தினர்" என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியீட்டு விழா,  சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்தது.

இந்த நூலை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் பேசியதாவது:

சிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானமாக உள்ளது. அதனால் தான் பாராளுமன்றத்தில் தமிழ், அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், பயிற்று மொழியாக கல்விக் கூடங்களிலும் உள்ளது.

இங்குள்ள இளைஞர்களிடம் தமிழைக் கொண்டு சேர்த்து அதை என்றும் துடிப்புடன் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசிய போது, கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும்  கைதட்டி ஆரவாரம் செய்தது அங்கே தமிழுக்குக் கிடைத்த மரியாதை ஆகும்.

மூலக்கதை