ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெற்றிபெறும் முனைப்பில் இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெற்றிபெறும் முனைப்பில் இந்தியா

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.   இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன.

இதில், இந்தியா 2, ஆஸ்திரேலியா 1 போட்டியில் வெற்றிபெற்றன. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், சிட்னியில் நாளை 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியாவும், தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலியாவும் களமிறங்குகின்றன.

இதனால், இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது.

எனவே, இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் இடம்பெற வாய்ப்புள்ளது. காயம் காரணமாக பெர்த், மெல்போர்னில் நடந்த போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அஷ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அஷ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எனினும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. உடல் தகுதி பெற்றிருக்கும் பட்சத்தில் நாளை தொடங்கும் ஆட்டத்தில் அஷ்வின் களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்தியா திரும்பியுள்ள ரோகித் சர்மாவின் இடத்தில் ஆல்ரவுண்டர் பாண்டியா களமிறங்கலாம் என தெரிகிறது. அஷ்வின் குணமடையவில்லை எனில் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

 
 
இதேபோல், ஆஸ்திரேலிய அணியில் சிறிய மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. கடந்த 3 போட்டிகளிலும் துவக்க  வீரராக களமிறங்கி ரன் குவிக்க தவறிய ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் கடைசி டெஸ்டில்  இடம்பெற மாட்டார் என தெரிகிறது.

அணிக்கு வலு சேர்க்கும் வகையில், சுழற்பந்து வீச்சாளர் லாபுசாங்கே சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் சிறந்து விளங்குகிறது.

பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தி ஆடும் பட்சத்தில் இந்த தொடரை வெல்ல வாய்ப்புள்ளது. இதற்கு ஏற்றார்போல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சிட்னி மைதானத்தில் இந்திய அணி இதுவரை 11 டெஸ்டில் விளையாடியுள்ளது.

5 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

5 போட்டிகள் டிராவில் முடிந்தன.

கடந்த 1978ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. 40 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி மைதானத்தில் வெற்றிபெறவில்லை.

நாளை தொடங்கும் போட்டியில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றியாக கருதப்படும்.    

.

மூலக்கதை