சென்னை புத்தக கண்காட்சியை ஜனவரி 4 -ந் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து விருது வழங்குகிறார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சென்னை புத்தக கண்காட்சியை ஜனவரி 4 ந் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து விருது வழங்குகிறார்!

சென்னை புத்தக கண்காட்சியை ஜனவரி 4-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, சிறந்த பெண் எழுத்தாளர், பதிப்பாளர், சிறந்த விற்பனையாளர் விருதுகளையும் வழங்குகிறார்.

இது குறித்து ப.பா.சி தலைவர் வயிரவன், துணைத் தலைவர் மயில்வேலன், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 

புத்தக பிரியர்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் எதிர்பார்த்த 42-வது சென்னை புத்தக கண்காட்சி வரும் 4-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சி வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது. 

தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சென்னை புத்தக கண்காட்சி வரலாற்றிலேயே முதன்முதலாக 17 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 10 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பது சிறப்பு அம்சமாகும். 

சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நல்லி குப்புசாமி தலைமை வகிக்கிறார். இந்த ஆண்டு முதன்முதலாக சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் அம்சவேணி பெரியண்ணன் பெயரிலான விருது முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதிக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை முதல்வர் எடப்பாடி வழங்குகிறார்.

இந்த ஆண்டு சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பக செம்மல் கணபதி விருது, முல்லை பதிப்பகம் முல்லை பழனியப்பனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான விருதான ஆர்.கே. நாராயண் விருது காயத்ரி பிரபுவுக்கும், சிறந்த விற்பனையாளருக்கான செம்மல் மெய்யப்பன் விருது ஹிக்கின்பாதம்ஸ் சந்திரசேகருக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ. வள்ளியப்பா விருது சபீதா ஜோசப்புக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பத்ரி செல்லப்பனார் விருது மறைந்த முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணனுக்கும் வழங்கப்படுகிறது.

820 அரங்குகளுடன் 420-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் புத்தக கண்காட்சி தொடங்குகிறது.இதில் சுற்றுச்சூழலுக்கேற்ப தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் கட்டிடத்துறை, உணவுத்துறை மற்றும் உடல்நலன், திரைப்படத் துறை, இசை சார்ந்த நூல்களுக்கான தனி அரங்குகளும் இடம்பெறுகின்றன. சாகித்ய அகாடமி, சென்னை பல்கலைக் கழகம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தேசிய புத்தக நிறுவனம், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பப்ளிகேசன் டிவிசன், உ.வோ.சா. நூல் நிலையம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் போன்ற அமைப்புகளும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பெங்குவின் நிறுவனத்தின் புத்ததங்களும் இடம்பெறுகின்றன.

இந்த ஆண்டு வாசகர்களை கவரும் வண்ணம் பிரம்மாண்டமான தமிழ் அன்னை உருவச்சிலை புத்தக காட்சி வளாகத்தில் நிறுவப்படுகிறது. இந்த சிலையை தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வரும் 5-ம் தேதி திறந்து வைக்கிறார்.

ப.பா.சி இணையதளத்திலும் bapasi.com கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டை வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன் கலந்து கொள்கிறார்.  தமிழன்னை திருவுருவத்தை பிரபலப்படுத்தி வரும் பேராசிரியர் ஆறு. அழகப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

மூலக்கதை