நாட்டிலேயே மிக நீளமான ரயில்-சாலை இரண்டு அடுக்குப் பாலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

நாட்டிலே மிகவும் நீளமான ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்குபாலத்தை பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைத்தார். 

அஸ்ஸாம் மாநிலத்தில் பொகீபில் என்னும் இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 4.94 கி.மீ. தூரத்திற்கு இந்தப் பாலம் கட்டப்பட்டு உள்ளது.

பாலத்தின் கீழ் அடுக்கில் இரட்டை அகல ரயில் பாதையும், மேல் அடுக்கில் மூன்று வழிச் சாலையும் இடம்பெற்றுள்ளன. கடந்த 1997-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் தேவகவுடா இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் வாஜ்பாயால் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. 

முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2007-ஆம் ஆண்டில் இதை தேசிய திட்டமாக அறிவித்தது. மொத்தத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு வாஜ்பாய் பிறந்த தினத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

தின்சுகியா - நாஹர்லாகுன் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது வெறும் பாலம் அல்ல. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களை இணைக்கும் உயிர்நாடி அது என்றார் பிரதமர் மோடி.

அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் அருகேயுள்ள பொகீபில் என்னும் இடத்தில் இந்த இரட்டைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா நகரில் இருந்து அருணாசலப் பிரதேச மாநிலத்தின் நாஹர்லாகுன் நகருக்கு ரயிலில் செல்வதற்கான பயண நேரம் 10 மணி நேரத்துக்கும் மேலாக குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாகப் பதிவாகும் நிலநடுக்கத்தை தாங்கும் வல்லமை கொண்டது. தொடக்கத்தில் ரூ.3,230.02 கோடியில் திட்டமிடப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி, கால தாமதம் காரணமாக ரூ.5,960 கோடி செலவில் முடிந்து இருக்கிறது. 

பொகீபில் ரயில்-சாலை இரட்டை பாலத்தால் இந்திய பாதுகாப்புத் துறையின் பலம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக, அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் வகையில் பாலம் கட்டமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் பிரம்மபுத்ரா நதியின் தெற்குக் கரையில் இருந்து வடக்கு கரைக்கு எளிதாக செல்வதற்கு இந்த இரட்டைப் பாலம் பேருதவியாக இருக்கும் என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதாவது, சீனாவை ஒட்டிய இந்தியாவின் தொலைதூர எல்லைப் பகுதியை சென்றடைவது இனி எளிதாக இருக்கும் என்றார் அவர்.

மூலக்கதை