புரோ கபடி லீக் விடைபெற்றது தமிழ் தலைவாஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் விடைபெற்றது தமிழ் தலைவாஸ்

கொல்கத்தா: புரோ கபடி லீக் போட்டியில், அரியானா அணியுடனான ஆட்டம் டிராவில் முடிவடைந்த நிலையில், இத்தொடரில் இருந்து தமிழ் தலைவாஸ் அணி வெளியேறியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 127வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், அரியானா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடியதால், போட்டி விறுவிறுப்பாக இருந்தது.   முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-14 என முன்னிலை வகித்தது.

2ம் பாதி ஆட்டத்திலும் விறுவிறுப்பு தொடர்ந்த நிலையில், ஒருகட்டத்தில் 20-20 என  சமநிலை ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் சிறப்பாக விளையாடி புள்ளிகளை அள்ளினார்.

இதனால் தலைவாஸ் அணி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. கடைசி நிமிடத்தில் 2 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது.



சுதாரித்து கொண்ட அரியானா அணி வீரர்கள் கடுமையாக போராடினர். கடைசி நேரத்தில் அந்த அணியின் விகாஸ் ரைடு மூலம் ஒரு புள்ளி எடுத்தார்.

இதனால் 40-40 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது. ஆட்டம் டிரா ஆன நிலையில், இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் போட்டி முடிவுக்கு வந்தது.

தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்தது. 5 வெற்றி, 13 தோல்வி, 4 டிரா என்று மொத்தம் 42 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

தமிழ் தலைவாஸ் அணி கடந்தாண்டு அறிமுகமானது. முதலாவது சீசனிலும் சிறப்பாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில், பெங்கால் மற்றும் தெலுங்கு அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில், பெங்கால் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பரபரப்பான ஆட்டத்தில், 39-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு அணி தோல்வியை தழுவியது.

புரோ கபடி லீக் போட்டி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ‘ஏ’ பிரிவில் குஜராத், மும்பை, டெல்லி அணிகளும், ‘பி’ பிரிவில் பெங்களூரு, பெங்கால் அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாட்னா, உ. பி. அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இன்று நடைபெறும் போட்டிகளில், குஜராத்-பாட்னா அணிகள், பெங்கால்-பெங்களூரு அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

.

மூலக்கதை