கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுகள் தொடங்க ஏற்பாடு- அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கீழடியில் 5ம் கட்ட அகழாய்வுகள் தொடங்க ஏற்பாடு அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக, அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 17 மாவட்ட அரசு இசைப் பள்ளிகளின் மாணவர்கள்,  ஆசிரியர்கள் கலந்துகொண்ட கலை நாள் விழா  நடைபெற்றது. 

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமை வகித்தார்.  விழாவில் பங்கேற்றவர்களுக்குப்  பரிசுகள் வழங்கி,  அமைச்சர்  பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  கலை பண்பாட்டுத் துறையைத் தொடங்கிய டிசம்பர் 23-ஆம் தேதி,  இந்த ஆண்டு முதல் கலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து,  17 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு இசைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட கலை நாள் விழா நடைபெற்று உள்ளது. இனி  ஆண்டு தோறும் கலை நாள் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் மத்திய அரசு உதவியுடன் இசை அருங்காட்சியகம்  அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இசைக் கல்லூரிகளை சமுதாயக் கல்லூரிகளாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களிலும் இசைப் பள்ளி தொடங்கப்பட உள்ளது. இசைத் துறையில் கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாத கலைமாமணி விருதுகள் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. 

100 கலைமாமணி விருதுகளுக்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அவற்றைப் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.இசை கற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க, சிவன் கோயில்களில் தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள் இருப்பதுபோல், பெருமாள் கோயில்களில் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஓத முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதனால், இசை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் விரைவில் ஐந்தாம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை