இந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத்தரவு

ஜகார்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அதிபர்
உத்தரவிட்டுள்ளார். இந்தோனேஷியாவின் ஜாவா - சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள சுந்தா ஜலசந்தி பகுதியில், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9. 27 மணியளவில் பயங்கர சுனாமி ஏற்பட்டது.

இப்பகுதியில் அமைந்துள்ள ‘அனாக் கிரகட்டாவ்’ எரிமலை வெடித்துச் சிதறியதால், ஆழ்கடலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுனாமி தாக்கியது. சுனாமி அலைகள் 10 மீ முதல் 20 மீ உயரத்திற்கு எழுந்தது.

ஜாவா தீவில் அமைந்துள்ள பான்டன் மாகாணத்தின் பான்டெக்லாங்க் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு கடற்கரையை ஒட்டிய வீடுகள் முழுவதும் சேதமடைந்தன.

கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சுனாமியால் சுமத்ரா தீவின் பந்தர் லும்பங் நகரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கும் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

சுனாமியில் சிக்கி 222 பேர் பலியானதாகவும், 700 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 30 பேரை காணவில்லை என்றும் இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது.

 சுனாமி தாக்கிய பல பகுதிகளை இன்னும் மீட்புக்குழு சென்றடையாததால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.

வீடுகளை  இழந்தவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தகவல்படி சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை, 281 ஆகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம், இந்தோனேஷியாவின் பலு தீவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தின் காரணமாக, அந்நாட்டை சுனாமி தாக்கியது. இதில், சுமார்  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது மீண்டும் ஒரு  பேரிடர் இந்தோனேசியாவைத் தாக்கியுள்ள நிலையில், அந்நாடு கடும் துயரில்  ஆழ்ந்துள்ளது. இந்த சூழலில், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு  தொண்டு நிறுவனங்கள் இந்தோனேசியாவுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டியுள்ளன. இதுகுறித்து, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், ‘பான்டன், லும்பங் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

.

மூலக்கதை