‘டெஸ்ட் கிரிக்கெட்தான் சவாலானது’: ராகுல் டிராவிட் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘டெஸ்ட் கிரிக்கெட்தான் சவாலானது’: ராகுல் டிராவிட் பேட்டி

பெங்களூரு: டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் டெஸ்ட் போட்டிதான் சவாலானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சுவர் என்றழைக்கப்பட்ட ராகுல் டிராவிட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களை குவித்துள்ளார்.

36 சதங்கள், 63 அரை சதங்கள் என டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 52. 31 ரன்கள். தற்போது இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக உலா வரும் டிராவிட், ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதுதான் சவாலானது’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: எனது பயிற்சியின் கீழ் ஆடும் இளம் வீரர்களிடம் நான் எப்போதுமே சொல்வது இதுதான். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதுதான் சவாலானது.

உங்களை சோதனை செய்யும் போட்டி, டெஸ்ட் போட்டிதான்.

நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினால்தான் உங்களுக்கு உண்மையான திருப்தி கிடைக்கும். கிரிக்கெட்டில் கடினமான போட்டி என்றால் அது டெஸ்ட் போட்டிதான்.

5 நாட்களில் உங்களுடைய உடல் தகுதி, மனத்திடம், ஆட்டத்தில் உங்களது தொழில்நுட்பம், உணர்வுப் பூர்வமாக எப்படி போட்டியை எதிர்கொள்கிறீர்கள் என்பது உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் டெஸ்ட் போட்டிகள் வெளிப்படுத்திவிடும். அதனால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு, இப்போது முதலே நீங்கள் ஆட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டி–்ன் அனைத்து போட்டிகளிலும் (டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட்) இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மிகச் சிறப்பாக ஆடி வருகிறார்.

அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று முயற்சி செய்து வரும் இளம் வீரர்களுக்கு, விராட் கோஹ்லி மிகச் சிறந்த உதாரணம்.

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என 3 வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக ஆடுவது எளிதல்ல. மிகச் சிலரே அதில் பிரகாசித்திருக்கின்றனர்.

ஆனால் உங்களது இலக்கு அதுவாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறு 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு தான் ஆலோசனை கூறியுள்ளதாக, ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

டிராவிட் தலைமையிலான இந்திய அணி, கடந்த பிப்ரவரியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை கைப்பற்றியது. மேலும் அந்த தொடரில் இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் முன்னேறி, இறுதிப் போட்டியிலும் வென்று சாதனை படைத்தது  குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை