முழு உடல் தகுதியுடன் உள்ளார் ரவீந்திர ஜடேஜா: பிசிசிஐ தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முழு உடல் தகுதியுடன் உள்ளார் ரவீந்திர ஜடேஜா: பிசிசிஐ தகவல்

புதுடெல்லி:  இந் திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ளார் என்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இடது தோள்பட்டையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா ஆடவில்லை என்று தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் காயத்துடன்தான் ஆஸ்திரேலியா வந்தார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் சிறந்த பவுலர்களில் ரவீந்திர ஜடேஜா 5வது இடத்தில் உள்ளார். அதே போல் சிறந்த ஆல் ரவுண்டர்களில் 2ம் இடத்தில் உள்ளார்.

ஆஸி. அணிக்கு எதிராக  அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பெர்த்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸி. யிடம் பரிதாபமாக தோல்வியடைந்தது.

‘4 வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பி களமிறங்கியது தவறு.

அணியில் ஒரு ஸ்பின் பவுலர் அல்லது ஆல்-ரவுண்டர் ஒருவர் இடம் பெற்றிருந்தால் இந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா காயமடைந்திருந்தார் என்று பெர்த் தோல்விக்கு பின்னர் ரவி சாஸ்திரி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் காயத்துடன்தான் ஆஸி. க்கு புறப்பட்டார் என்றும் அவர் இப்போது தெரிவித்துள்ளார்.

இதற்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் விதமாக, ரவீந்திர ஜடேஜா தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவரது தோள்பட்டை காயம் முற்றிலுமாக குணமாகி விட்டது.

மெல்போர்னில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறுவார் என்று பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்க உள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘பெர்த் போட்டிக்கு முன்னதாக வலை பயிற்சியில் ஜடேஜாவின் செயல்பாடுகள், சற்று பின்தங்கி இருந்தது. காயம் காரணமாக குறிப்பாக பந்துவீச்சில் சற்று பாதிப்பு இருந்தது.

அதனால்தான் அந்த டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்களில் அவர் இடம் பெறவில்லை’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

மூலக்கதை