இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்களில் பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடம் பிடித்தது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்களில் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடம் பிடித்தது

இந்தியாவின் சிறந்த டாப் 10 காவல் நிலையங்களில் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தை பிடித்தது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த 10 காவல்நிலையங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான விருதை தேர்வு செய்வதற்கான குழு தென்மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி,  கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வு நடத்தியது.  

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்த ஆய்வை தேனி மாவட்டம், பெரியகுளம் காவல்நிலையத்தில் மேற்கொண்டனர். பழைய வழக்குகள் ஆவணங்கள் பராமரிப்பு,  ஓராண்டிற்குள் வழக்குகளில் காணப்பட்ட தீர்வு, பணிபுரியும் அதிகாரிகள், போலீசார் குறித்த குற்றங்கள் குறித்து 41 வகையான விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் அப்பகுதி பொதுமக்களிடம், காவல்நிலையம் குறித்து  விசாரிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் இந்தியாவின் 8வது சிறந்த காவல்நிலையமாக பெரியகுளம் காவல்நிலையத்தை தேர்ந்தெடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. 

முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலம் - ‘கலு’, அந்தமான் நிகோபார் தீவில் - ‘கேம்பல் பய்’, மேற்கு வங்கம் - ‘பராக்கா’, புதுச்சேரி - ‘நெட்டப்பாக்கம்’, கர்நாடகா மாநிலம் - ‘குடேரி’, இமாச்சல பிரதேசம் - சோபால்,  ராஜஸ்தான் மாநிலம் - லகேரி, தேனி மாவட்டம், பெரியகுளம், உத்தரகாண்ட் மாநிலம் - முன்சூரி, கோவா மாநிலம் - சர்சோரம் ஆகிய காவல் நிலையங்கள் தேர்வாகி உள்ளன.

இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அத்துடன் பெரியகுளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் காவலர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மூலக்கதை