பெர்த் டெஸ்டில் இந்தியா ஏமாற்றம் 146 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி: நாதன் லயன் ஆட்ட நாயகன்

தினகரன்  தினகரன்
பெர்த் டெஸ்டில் இந்தியா ஏமாற்றம் 146 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி: நாதன் லயன் ஆட்ட நாயகன்

பெர்த்: இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்படுத்தியது. பெர்த் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 283 ரன் எடுத்தது. கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 123 ரன் விளாசினார். இதையடுத்து, 43 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 6 விக்கெட் வீழ்த்தினார்.  இதைத் தொடர்ந்து, 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்திருந்தது. விஹாரி 24 ரன், பன்ட் 9 ரன்னுடன் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். வெற்றிக்கு இன்னும் 175 ரன் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் உறுதியுடன் போராடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். விஹாரி மேற்கொண்டு 4 ரன் மட்டுமே சேர்த்து ஸ்டார்க் பந்துவீச்சில் ஹாரிஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பன்ட் 30 ரன் எடுத்து (61 பந்து, 2 பவுண்டரி) லயன் சுழலில் ஹேண்ட்ஸ்கோம்ப் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டுடன் இந்திய நம்பிக்கை அடியோடு தகர்ந்தது. ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் இந்திய ‘வால் பசங்களை’ தங்களின் அதிவேக பவுன்சர்களால் மிரட்டினர். அவற்றை சமாளிக்க முடியாமல் திணறிய உமேஷ் 2 ரன் எடுத்து (23 பந்து) ஸ்டார்க் வேகத்தில் அவரிடமே பிடிபட, அடுத்து வந்த இஷாந்த் ஷர்மா, பூம்ரா இருவரும் கம்மின்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.இந்தியா 56 ஓவரில் 140 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. முகமது ஷமி (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டையும் இழந்தது. அதிலும், 3 ரன்னுக்கு கடைசி 4 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. பின்வரிசை வீரர்கள் எதிர்ப்பின்றி சரணடைந்ததால், இந்தியா 146 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவ நேரிட்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டார்க், லயன் தலா 3, ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.  முதல் இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தம் 8 விக்கெட் வீழ்த்திய ஆஸி. வீரர் நாதன் லயன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் மெல்போர்னில் வரும் 26ம் தேதி ‘பாக்சிங் டே’ டெஸ்டாக தொடங்குகிறது. * இந்த ஆண்டு வெளிநாட்டில் சேஸ் செய்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக சந்தித்த 6வது தோல்வி இது.* பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்டீவஸ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர், தற்போது தான் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டெஸ்ட் வெற்றியைருசித்துள்ளது.* டிம் பெய்ன் கேப்டன் பொறுப்பேற்ற பிறகு வென்ற முதல் டெஸ்ட் இது.

மூலக்கதை