வருண் 8.4 கோடி, ஷிவம் துபே 5 கோடி: புதுமுக வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!: யுவராஜ் சிங்குக்கு 1 கோடி!

தினகரன்  தினகரன்
வருண் 8.4 கோடி, ஷிவம் துபே 5 கோடி: புதுமுக வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!: யுவராஜ் சிங்குக்கு 1 கோடி!

ஜெய்பூர்: ஐபிஎல் டி20 தொடருக்கான 12வது சீசன் ஏலத்தில் புதுமுக வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே போன்றவர்கள் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 2ம் கட்டத்தில் 1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 2019ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 1,003 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், 346 பேர் கொண்ட இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் இருந்து 8 அணிகளுக்காக 70 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். பிரெண்டன் மெக்கல்லம், கோரி ஆண்டர்சன் உட்பட 9 வீரர்களின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்தேவ் உனத்காட், மார்னி மார்கெல, ஸ்டெயின், பேர்ஸ்டோ ஆகியோருக்கு 1.5 கோடியும், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், முகமது ஷமி, சாஹா, அம்லா, டுமினி, கப்தில் ஆகியோருக்கு 1 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்தனர். விறுவிறுப்பான ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரை ஏலம் எடுக்க பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. வேகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்காட் இதே தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முந்தைய சீசனில் இவர் 11.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டிருந்தார். மும்பையை சேர்ந்த புதுமுக வீரர் ஷிவம் துபே 5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட நிலையில்... பிரபல நட்சத்திரங்களான யுவராஜ் சிங், செதேஷ்வர் புஜாரா, மார்டின் கப்தில், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், டேல் ஸ்டெயின் ஆகியோர் முதற்கட்ட ஏலத்தில் விலை போகவில்லை. 2ம் கட்ட ஏலத்தில் யுவராஜ் சிங் அடிப்படை விலையான 1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். மார்டின் கப்திலை 1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. தென் ஆப்ரிக்க வேகம் டேல் ஸ்டெயின் 2ம் கட்ட ஏலத்திலும் விலைபோகாதது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வீரர்களில் மிக அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரன் 7.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 16 வயதில்  1.5 கோடி மேற்குவங்கத்தை சேர்ந்த 16 வயது ஸ்பின்னர் பிரயாஸ் ரே பர்மன்1.5 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார்.

மூலக்கதை