2வது இன்னிங்சில் இலங்கை ரன் குவிப்பு: மெண்டிஸ் - மேத்யூஸ் ஜோடி நாள்முழுவதும் விளையாடி அசத்தல்

தினகரன்  தினகரன்
2வது இன்னிங்சில் இலங்கை ரன் குவிப்பு: மெண்டிஸ்  மேத்யூஸ் ஜோடி நாள்முழுவதும் விளையாடி அசத்தல்

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், குசால் மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணி 2வது இன்னிங்சில் ரன் குவித்து வருகிறது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. சவுத்தீ வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கருணரத்னே 79, ஏஞ்சலோ மேத்யூஸ் 83, டிக்வெல்லா ஆட்டமிழக்காமல் 80 ரன் விளாசினர். நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுத்தீ 6 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் டாம் லாதம் 264 ரன் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் வில்லியம்சன் 91, ராவல் 43, ராஸ் டெய்லர் 50, நிகோல்ஸ் 50, கிராண்ட்ஹோம் 49 ரன் எடுத்தனர். இதையடுத்து, 296 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் 5 ரன், மேத்யூஸ் 2 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் நிதானமாக ரன் சேர்க்க, இலங்கை அணி ஸ்கோர் கவுரமான நிலையை எட்டியது.  நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. குசால், மேத்யூஸ் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்துள்ளது (102 ஓவர்).குசால் மெண்டிஸ் 116 ரன் (287 பந்து, 12 பவுண்டரி), ஏஞ்சலோ மேத்யூஸ் 117 ரன்னுடன் (293 பந்து, 11 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இலங்கை அணி இன்னும் 37 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை