மோடியால் ஏற்படப்போகும் தோல்வியை தவிர்க்க நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு பாஜ மூத்த தலைவர் கோரிக்கை

தினகரன்  தினகரன்
மோடியால் ஏற்படப்போகும் தோல்வியை தவிர்க்க நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு பாஜ மூத்த தலைவர் கோரிக்கை

மும்பை: அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜ மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்க வேண்டுமானால், பிரதமர் வேட்பாளராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மகாராஷ்டிரா அரசின் விவசாய அமைப்பின் தலைவர் கிஷோர் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா அரசின் வசந்த்ராவ் நாயக் ஷேத்தி ஸ்வலம்பன் மிஷன் என்ற விவசாய மேம்பாட்டு அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர், பாஜ.வைச் சேர்ந்த கிஷோர் திவாரி. இந்த பதவி அமைச்சர் பதவிக்குரிய அந்தஸ்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷி ஆகியோருக்கு கிஷோர் திவாரி நேற்று அனுப்பி வைத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது;‘திமிர்பிடித்த தலைவர்களால்’ தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிப்பதுடன் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை கொண்டு வருவது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பயங்கரவாதிகளை போலவும், சர்வாதிகாரப் போக்குடனும் நடந்து கொள்ளும் தலைவர்களும் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரும் கேடுகளை விளைவிக்கும்.  அதனால், 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தலை நிதின் கட்கரி தலைமையில் பாஜ சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜ அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை நரேந்திர மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து மறக்கடிக்கச் செய்து விட்டார்கள். அதனாலேயே அந்த மாநிலங்களில் பாஜ தோல்விகளை சந்திக்க நேரிட்டது. புல்லட் ரயில், மெட்ரோ ரயில் திட்டங்கள் மீதுதான் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் ஆர்வமாக இருக்கிறார்கள். மோடி மற்றும் அமித்ஷாவின் சர்வாதிகார போக்கு நாட்டில் ஒருவித அச்ச உணர்வை மக்க ளிடையே ஏற்படுத்தியுள்ளது. அதனால், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படும், அனைத்துக் கட்சிகளுடனும் நட்புறவு பேணிவரும் ஜென்டில்மேன் அரசியல் தலைவரான நிதின் கட்கரியை பாஜ.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.‘அமித்ஷாவிடம் இருந்து கட்சியை மீட்க வேண்டும்’கிஷோர் திவாரி கடந்த சில மாதங்களாகவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜ தலைவர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ‘‘மோடி, அமித்ஷா ஆகியோர் மிக கோரமானவர்கள். அவர்களது நடவடிக்கைகளால்தான் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ தோல்வியடைந்தது. அவ்விருவரின் கோரப்பிடியில் இருந்து பாஜ.வை மீட்க வேண்டும்’’ என்று கிஷோர் திவாரி சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மும்பை வந்திருந்த நிலையில், கிஷோர் திவாரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மேற்கண்ட காட்டமான கடிதத்தை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை