அதிபர் ஜின்பிங் காட்டம் சீனாவுக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது

தினகரன்  தினகரன்
அதிபர் ஜின்பிங் காட்டம் சீனாவுக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது

பீஜிங்: ‘‘சீனாவில் பின்பற்றப்படும் பொருளாதார திட்டம் தொடர்பாக எந்த நாடும் எங்களுக்கு கட்டளையிட முடியாது’’ என்று அதிபர் ஜின்பிங் தெரிவித்தார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனாவும் தங்கள் நாட்டில்  இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால், இரு நாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. புதிய இறக்குமதி வரி விதிப்பு முறையை நிறுத்தி வைப்பதாக இருநாடுகளும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்காவை குற்றம்சாட்டு விதமாக சீன அதிபர் ஜின்பிங் சீனாவுக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.  சீனாவின் பீஜிங் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது: சீனாவில் 40 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் தலைமையிலான ஒற்றை அரசு பின்பற்றும் கொள்கை அல்லது பொருளாதார சீர்திருத்தம் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. சீன மக்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என உத்தரவிடும் நிலையில் எந்த நாடும் இருக்க முடியாது. இது தொடர்பாக எந்த நாட்டிடம் இருந்தும் எங்களுக்கு மிரட்டல் வரவில்லை. சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த பல ஆயிரம் மக்களின் நிலைமை மாறியுள்ளது. தற்போது, சீனா உலக பொருளாதாரத்தில் 2வது இடத்தில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் 97.5 சதவீதமாக இருந்த வறுமைகோட்டின் அளவு கடந்த ஆண்டு 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை