சத்தீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை : முதல்வர் பூபேஷ் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சத்தீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை : முதல்வர் பூபேஷ் அறிவிப்பு

ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தீஸ்கர் மாநிலத் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் நேற்று பதவி ஏற்று கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் ரூ.6,100 கோடிவிவசாய கடனை தள்ளுபடி செய்யவும், நெல்லுக்கு கூடுதல் விலை அளிக்கும் வகையிலும் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல்வராக பதவியேற்ற அவருக்கு மாநில ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். முன்னதாக நேற்று மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்ற கமல்நாத் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வராக நேற்று மாலை பதவியேற்ற பூபேஷ் பாகெல்,  விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தும், நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 என நிர்ணயித்தும் உத்தரவிட்டுள்ளார்.இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகெல், தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கூறியது போல விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார். முதற்கட்டமாக 6.65 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், சத்தீஸ்கர் கிராம வங்கியில் நவம்பர் 30-ம் தேதி வரை வாங்கியுள்ள ரூ.6100 கோடி மதிப்புள்ள அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றார். மேலும் நெல்லுக்கு தற்போது ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயித்த ரூ.1,750 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார விலையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க உள்ளதாக கூறினார். மீதமுள்ள ரூ.750-ஐ விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் என்றார். இனி விவசாயிகளிடமிருந்து நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்று அரசு கொள்முதல் செய்யும் என கூறினார்.

மூலக்கதை