அமெரிக்காவின் வர்சீனியா தமிழர்களின் அரிய முயற்சியால் அடுத்தத் தலைமுறையினர் தமிழ் படிக்க அரசு நூலகத்தில் தமிழ் நூல்கள்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவின் வர்சீனியா தமிழர்களின் அரிய முயற்சியால் அடுத்தத் தலைமுறையினர் தமிழ் படிக்க அரசு நூலகத்தில் தமிழ் நூல்கள்..

டிசம்பர் 16,2018: அமெரிக்காவின் தமிழர்கள் அதிகம்  வசிக்கும் பல மாகாணங்களில் உள்ள அரசு பொது நூலகங்களில் தமிழ் நூல்களும் , தமிழ் படங்கள் உள்ளிட்ட காணொளித் தொகுப்புகளும் இருந்தாலும்  வெர்சீனியா மாகாணத்தில்  இதுவரை எந்த நூலகத்திலும் தமிழ் நூல்கள் இல்லை. இப்படி ஒரு அமெரிக்க பொது நூலகத்தில் ஒரு தமிழ்ப்பகுதி உருவாக்கவேண்டுமென்றால் அந்த மாகாணத்தில்  வசிக்கும் தமிழர்கள் முயற்சி செய்து, அதிக மக்கள் விரும்புகிறோம் என்று அதற்காக முறைப்படியான கோரிக்கையை வைத்து, போதிய புத்தகங்களைத் திரட்டி இதற்காக கடுமையாக உழைத்தால்தான் இது நடைமுறைக்கு வரும்.

இந்த வகையில் வெர்சீனியாவில் இந்த வாய்ப்பு இதுவரை இல்லாமல் இருந்தது.  இதையொட்டி வெர்சீனியாவில்  இயங்கும் வள்ளுவன் தமிழ்மையம் இந்த முயற்சியை முன்னெடுத்து தன்னார்வலர்களைத் ஒன்று திரட்டி, போதிய நிதியை சேர்த்து, ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை தமிழகத்திலிருந்து வரவழைத்து புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பிராம்பில்டன் (Brambleton, Loudoun County) நூலகத்தில் திறப்பு விழாவினை மிகப்பெரிய அளவில் நடத்தி முடித்தனர். 

இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்க்கச்சங்கம், சங்கமம் தமிழ்ப்பள்ளி உள்ளிட்ட பல அமைப்புகளும் தமிழ் வணிக அமைப்புகளும் , தன்னார்வலர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் , இந்த மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களும் பெருமளவில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

வெர்சீனியா மாகாணத்தில் அரசு பொது நூலகத்தில் தமிழ்ப்பகுதி இருக்கும் முதல் நூலகம் என்ற பெருமையை இந்த பிராம்பில்டன் நூலகம் பெறுகிறது. இது மேலும் பல நகரில் இருக்கும் நூலகங்களுக்கும் விரிவடையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

 

மூலக்கதை