ரபேல் ஒப்பந்த பேர வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காங்கிரஸ் அவமதிக்கிறது - மோடி

PARIS TAMIL  PARIS TAMIL
ரபேல் ஒப்பந்த பேர வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காங்கிரஸ் அவமதிக்கிறது  மோடி

 பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேசத்துக்கு சென்றார். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பாதுகாப்பு தளவாட கொள்முதல் அனைத்தும் தாய்மாமாக்கள் மூலமோ அல்லது இதர மாமாக்கள் மூலமோ தான் மேற்கொள்ளப்படும். சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்டியன் மிசெல் என்ற மாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

ஆனால், பா.ஜனதா ஆட்சியில், குவாத்ரோச்சி மாமாவோ அல்லது கிறிஸ்டியன் மிசெலோ இல்லாமல் ராணுவ ஒப்பந்தம் செய்யப்படுவதால், காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது போலும்.

கிறிஸ்டியன் மிசெல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி நேரத்தை வீணாக்காமல், தனது கட்சி வக்கீலை அவருக்காக ஆஜராக அனுப்பி வைத்தது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில், ராணுவ அமைச்சகம், ராணுவ மந்திரி, விமானப்படை உயர் அதிகாரிகள், பிரான்ஸ் அரசு எல்லோரும் பொய்யர்கள். அதுபோல், சுப்ரீம் கோர்ட்டும் பொய் சொல்வதாக காங்கிரஸ் கூறுகிறது. இதன்மூலம், சுப்ரீம் கோர்ட்டு மீது அவநம்பிக்கையை உருவாக்கி, அதை அவமதிக்கிறது. எவ்வளவு பொய்கள் பரப்பப்பட்டாலும் உண்மைதான் இறுதியில் வெல்லும்.

பாதுகாப்பு படைகளின் தயார்நிலை விஷயத்தில், காங்கிரஸ் அரசின் அணுகுமுறையை மன்னிக்க முடியாது. நமது படைகள் வலிமை ஆவதை விரும்பாத சக்திகளுடன்தான் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.

கார்கில் போருக்கு பிறகு, விமானப்படைக்கு நவீன போர் விமானங்கள் தேவைப்பட்டது. காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் செய்யவில்லை? யாருடைய நிர்ப்பந்தத்தால் செய்யவில்லை?

அதுபோல், 2009-ம் ஆண்டு, இந்திய ராணுவம், குண்டு துளைக்காத ஒரு லட்சத்து 86 ஆயிரம் உடைகளை வாங்கித் தருமாறு கேட்டது. ஆனால், காங்கிரஸ் அரசு செய்யவில்லை.

எங்கள் அரசு வந்த பிறகுதான், அவற்றை வாங்கிக்கொடுத்தோம். எங்கள் அரசு, ஆயிரக்கணக்கான வீரர்களின் குடும்பங்களுக்கு கடமைப்பட்டது, ஒரு குடும்பத்துக்கு மட்டும் அல்ல. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரேபரேலியில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ரோபோக்கள் ரெயில் பெட்டி தயாரிப்பதை பார்வையிட்டார். அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ரெயில் பெட்டியை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர், பிரயாக்ராஜ் நகரில் (அலகாபாத்), கும்பமேளாவுக்கான கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கங்கா பூஜை செய்து வழிபட்டார்.

அப்போது பிரதமர் மோடி, “தங்களுக்கு உடன்படாத ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்த பார்க்கிறது. அதுபோல், நீதித்துறையையும், நீதிபரிபாலனத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. அக்கட்சி, சட்டத்தையோ, பாரம்பரியத்தையோ மதிப்பதே இல்லை. காங்கிரசிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மூலக்கதை