இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் நியூசிலாந்து: சதம் விளாசினார் லாதம்

தினகரன்  தினகரன்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் நியூசிலாந்து: சதம் விளாசினார் லாதம்

வெலிங்டன்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்து, முதல் இன்னிங்சில் 29 ரன் முன்னிலை பெற்றுள்ளது. சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் லாதம், 121 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. டிக்வெல்லா 73 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதல் நாளில் 5 விக்கெட் வீழ்த்திய சவுத்தீ, எஞ்சிய ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். சவுத்தீ வேகத்தில் குமாரா டக் அவுட்டாக, இலங்கையின் முதல் இன்னிங்ஸ் 282 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. டிக்வெல்லா 80 ரன்களுடன் (101 பந்து, 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சவுத்தீ 6, வாக்னர் 2, போல்ட், கிராண்ட்ேஹாம் தலா 1 விக்கெட் எடுத்தனர்.இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராவல், லாதம் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். 59 ரன்னாக சேர்த்த நிலையில், ராவல் 43 ரன்னில் (6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கி அதிரடி காட்டினார். லாதம்-வில்லியம்சன் ஜோடி, அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 91 ரன்னில் (93 பந்து, 10 பவுண்டரி) டிசில்வா பந்தில் ஆட்டமிழந்து, தனது 20வது சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். மறுமுனையில், லாதம் தனது சிறப்பான சதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த அனுபவ வீரர் டெய்லர் அரைசதம் அடித்தார். இதனால், 2ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 84 ஓவரில், 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களுடன் உள்ளது. அந்த அணி 29 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லாதம் 121, டெய்லர் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

மூலக்கதை