சர்ச்சையைத் தொடரும் ஹன்சிகா பட போஸ்டர்

தினமலர்  தினமலர்
சர்ச்சையைத் தொடரும் ஹன்சிகா பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளைக் கொண்ட போஸ்டர்கள் வெளியிடுவதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அப்படியிருந்தும் சிலர் விளம்பரத்திற்காக அப்படிப்பட்ட போஸ்டர்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படமான 'மஹா' படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் பக்கத்தில் ஒரு சாமியார் படுத்திருக்க, மற்றொரு சாமியார் உட்கார்ந்திருக்க, ஒரு சிம்மாசனத்தின் மேல் காவி உடையில் அமர்ந்திருக்கும் ஹன்சிகா, கஞ்சாவைப் புகைப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியானது. அதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று அதே படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ஹன்சிகா கஞ்சாவை இழுப்பது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. முதலில் வெளியான போஸ்டர் பற்றி தொடரப்பட்ட ஒரு வழக்கு ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று இரண்டாவதாக எந்தவிதமான பொறுப்புணர்வும் இல்லாமல் விளம்பரத்திற்காக இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை யு.ஆர்.ஜமீல் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்து மதத்தை தேவையின்றி இழிவுபடுத்தவும், புகை பிடிக்கும் போதை போஸ்டர்களை வெளியிட்டுள்ளது குறித்தும, இந்து மதத்தினரும், சமூக ஆர்வலர்களும் அவர்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

மூலக்கதை