தீர்மானம்! மேகதாது அணை அனுமதியை ரத்து செய்ய...புதுச்சேரி சட்டசபை இன்று காலை கூடுகிறது

தினமலர்  தினமலர்
தீர்மானம்! மேகதாது அணை அனுமதியை ரத்து செய்ய...புதுச்சேரி சட்டசபை இன்று காலை கூடுகிறது

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று காலை நடக்கிறது. கூட்டத்தில், மேகதாது அணைக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.கர்நாடக மாநிலம், மேகதாது என்ற இடத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அணை கட்டுவது தொடர்பாக ஆரம்பகட்ட ஆய்வு நடத்துவதற்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் இருந்து தண்ணீர் வருவது தடைபடும் என்பதால், தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகாவை கண்டித்து போராட்டங்களும் நடந்து வருகிறது.தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய நீர்வள ஆணையம் வழங்கி உள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தை போல, புதுச்சேரியிலும், சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம், இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. கூட்டம் துவங்கியதும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி, லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் அமைச்சர் காசிலிங்கம் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.இதைதொடர்ந்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.இருக்கை ஒதுக்கீடுபுதுச்சேரி சட்டசபைக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள, பா.ஜ.,வை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.,க்கள் மூவரின் நியமனம் செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில், எதிர்க்கட்சி வரிசை யில் நியமன எம்.எல்.ஏ.,க் களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்., அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை தொடர்ந்து பா.ஜ., நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை