102 வயதில், 'ஸ்கை டைவிங்' ஆஸ்திரேலிய பாட்டி சாதனை

தினமலர்  தினமலர்
102 வயதில், ஸ்கை டைவிங் ஆஸ்திரேலிய பாட்டி சாதனை

சிட்னி:ஆஸ்திரேலியாவை சேர்ந்த, ஐரீன் ஓ ஷக், 102 என்ற மூதாட்டி, விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து, 'மிகவும் வயதான பெண் ஸ்கை டைவர்' என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த, 'நியூரான் மோட்டார் டிசீஸ் அசோசியேஷன்' என்ற அமைப்பு, தசைகளை செயல் இழக்க செய்யும் நரம்பு நோய் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.இதற்காக, ஆண்டுதோறும், விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பதற்கு, மிகவும் வயதான நபரை தேர்ந்தெடுத்து, 'ஸ்கை டைவிங்' செய்ய வைப்பதன் மூலம் நிதி வசூலிக்கிறது.
இந்த ஆண்டு, 102 வயதான, ஐரீன் ஓ ஷக், என்ற மூதாட்டி, ஸ்கைடைவிங் செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டார்.சமீபத்தில், ஆஸ்திரேலியாவின், லாங்ஹார்ன் கிரீக் நகரில், 14 ஆயிரம் அடி உயரத்தில், விமானத்தில் இருந்து, பயிற்சியாளரின் உதவியுடன் ஐரீன் கீழே குதித்தார்.ஸ்கை டைவிங் செய்த ஐரீனின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ஐரீன் கூறியதாவது:ஸ்கை டைவிங் செய்த போது,வானிலை நன்றாக இருந்தாலும், குளிராக இருந்தது. இதில் கிடைக்கும் பணம், நரம்பு நோய் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை