ஆடுகளத்தை பார்த்து பயமா...? : கோஹ்லி உற்சாக பேட்டி

தினகரன்  தினகரன்
ஆடுகளத்தை பார்த்து பயமா...? : கோஹ்லி உற்சாக பேட்டி

பெர்த் ஆடுகளம் குறித்து, இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அளித்துள்ள பேட்டி: பெர்த் ஆடுகளத்தை பார்க்கும் போது, பதற்றத்தை விட உற்சாகமே மேலோங்கி இருக்கிறது. எதிரணியின் அனைத்து விக்கெட்டையும் வீழ்த்தும் அளவுக்கு, இந்திய அணியில் வலுவான பந்துவீச்சு உள்ளது. எனவே, பச்சை பசேல் என்றிருக்கும் பெர்த் ஆடுகளத்தை பார்த்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம். பெர்த் ஆடுகளம் அடிலெய்டை விட அதிகமான சாதகமான அம்சங்களை எங்களுக்கு தரும் என எதிர்பார்கிறேன். அதனால் இங்கு விளையாட உற்சாகமாகவே இருக்கிறோம். கடந்த 10 ஆண்டில் உலகின் பல்வேறு பகுதியிலும் விளையாடியிருக்கிறேன். ஆனால் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ஆடுகளத்தை போல வேறெங்குமே விளையாடியதில்லை. இதற்கு முன், 2012ல் பழைய பெர்த் மைதானத்தில் விளையாடியிருக்கிறேன். ஆனால் அது கூட ஜோகன்னஸ்பர்க் போல் இருந்ததில்லை. தற்போது இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஆடுகளத்தை பார்க்கும் போது ஜோகன்னஸ்பர்க்தான் நினைவில் வருகிறது.எனவே, இப்படிப்பட்ட ஆடுகளம் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பலமான பந்துவீச்சு அமைந்திருக்கும் சமயத்தில், அணியின் கேப்டனாக இருப்பது எனது அதிர்ஷ்டம். 2 இன்னிங்சிலும் 20 விக்கெட் வீழ்த்தினால் தான் டெஸ்டில்  வெற்றியை எட்ட முடியும். அதற்கு மாறாக, 600, 700, 800 ரன்களை குவித்தாலும் போதாது. 300 ரன் எடுத்தாலும், வலுவான பந்துவீச்சு இருந்தால் வெற்றியை எட்டலாம். அந்த நிலையில்தான் இந்திய அணி இருக்கிறது. எனவே, பந்துவீச்சாளர்களுக்கு உறுதுணையாக பேட்ஸ்மேன்களும் சவாலான ஒரு ஸ்கோரை எட்ட வேண்டும். பேட்டிங் சிறப்பாக அமைந்தால், நாம் எதிர்பார்க்கும் முடிவை அடைய முடியும். முதல் போட்டியில் வென்றதால் மெத்தனமாக இருக்க மாட்டோம். ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரையே வெல்ல வேண்டுமென்ற உறுதியுடன் விளையாடுவோம். பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எந்தளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதே சம விகிதத்திற்கு எங்களுக்கும் உண்டு. இவ்வாறு கோஹ்லி கூறி உள்ளார்.

மூலக்கதை