உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் நம்பர்-1 வீராங்கனையை வீழ்த்தினார் பி.வி. சிந்து

தினகரன்  தினகரன்
உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் நம்பர்1 வீராங்கனையை வீழ்த்தினார் பி.வி. சிந்து

குவாங்ஸூ: உலக டூர் பைனல்ஸ் தொடரில், நம்பர்-1 வீராங்கனையான சீன தைபேயின் டாய் ஜூ யிங்கை இந்தியாவின்  பி.வி.சிந்து வீழ்த்தினார். இதன் மூலம் அடுத்தடுத்த நாட்களில் நம்பர்-1, நம்பர்-2 வீராங்கனைகளை அவர் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். ஆண்டு இறுதியில் டாப்-8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடர் சீனாவின் குவாங்ஸூ நகரில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஏ பிரிவில் பி.வி.சிந்து (6வது ரேங்க்) நேற்று தனது 2வது லீக் ஆட்டத்தில் நம்பர்-1 வீராங்கனையான சீன தைபேயின்  டாய் ஜூ யிங்கை எதிர்த்து விளையாடினார். முதல் சுற்றை 14-21 என்ற கணக்கில் இழந்த சிந்து, 2வது செட்டில் ரணகளப்படுத்தினார்.21-16 என்ற கணக்கில் 2வது செட்டை வென்ற சிந்து, 3வது மற்றும் கடைசி செட்டிலும் அசத்தினார். விறுவிறுப்பாக நடந்த 3வது செட்டை கைப்பற்றிய சிந்து 14-21, 21-16, 21-18 என்ற செட்களில் வெற்றி பெற்றார். இப்போட்டி 1 மணி நேரம் 1 நிமிடம் நடந்தது. நேற்று முன்தினம், நம்பர்-2 வீராங்கனையான ஜப்பாஜின் யாமகுச்சியை சிந்து வென்றார். அடுத்தடுத்த நாட்களில் நம்பர்-1, நம்பர்-2 வீராங்கனைகளை வீழ்த்தியிருக்கும் அவர், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளார். சிந்து இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவின் பெய்வெனை சந்திக்கிறார். கடந்த ஆண்டு இத்தொடரில் சிந்து 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதே போல ஆண்கள் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் சமீர் வர்மா 21-16, 21-7 என்ற செட்களில் இந்தோனேஷியாவின் டாமி சுகைர்டோவை வென்று, நாக் அவுட் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். முதல் லீக் போட்டியில் சமீர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை