உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது

கொழும்பு: ‘இலங்கை நாடாளுமன்றம் தனது நாலரை ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன்பாக, அதை அதிபர் சிறிசேனா கலைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. இது அதிபர் சிறிசேனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா கடந்த அக்டோபர் 26ம் தேதி நீக்கினார். ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை. இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால், இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ராஜபக்சே பிரதமராக செயல்படவும், இலங்கை நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. ஐக்கிய தேசிய கட்சி எம்பி சாஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால், ரணிலுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்கும்படி அதிபர் சிறிசேனாவை சாஜித் பிரமேதாசா வலியுறுத்தினார். ஆனால், அவர் மறுத்து விட்டார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், ‘நாடாளுமன்றம் தனது நாலரை ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன்பாக அதை அதிபரால் கலைக்க முடியாது. நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என நீதிபதிகள் கூறினர். இந்த தீர்ப்பு அதிபர் சிறிசேனாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.  இந்த தீர்ப்பை தொடர்ந்து, ரணிலை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பை 7 நீதிபதிகளும் ஒருமனதாக அளித்துள்ளனர். இந்நேரத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’’ என்றார். பதற்றம்; பாதுகாப்புஉச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இலங்கையில் பதற்றம் நிலவுகிறது. நாட்டில் அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் சிறப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு போடப்பட்டது.

மூலக்கதை