துருக்கி ரயில் விபத்தில் 9 பேர் பலி: 47 பேர் காயம்

தினகரன்  தினகரன்
துருக்கி ரயில் விபத்தில் 9 பேர் பலி: 47 பேர் காயம்

அங்காரா: துருக்கியில் நடந்த ரயில் விபத்தில்  ஒரே தண்டவாளத்தில் வந்த இன்ஜின் மீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். 47 பேர் காயம் அடைந்தனர். துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய மாகாணமான கொன்யாவிற்கு அதிவேக ரயில் நேற்று காலை சென்றது. அதில், 206 பயணிகள் பயணம் செய்தனர். அங்காராவில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் அடுத்த 6 நிமிடங்களில மர்சான்டிஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது, திடீரென அதே தண்டவாளத்தில் வந்த சோதனை ரயில் இன்ஜின் மீது பயங்கரமாக மோதியது. அதில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. மேலும்,  அந்த ரயில் அங்கிருந்த மேம்பாலத்தின் மீது இடித்ததில் இரு பெட்டிகள் நொறுங்கின. சோதனை ரயில் இன்ஜினும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்களை இயக்கிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். சம்பவம் பற்றி அறிந்து வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய ரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீட்கப்பட்ட  இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும் 47 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேரின் நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது. பனிமூட்டம் காரணமாக ரயில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

மூலக்கதை